உள்ளூர் செய்திகள்

கோவையில் போதை மாத்திரை விற்ற 7 பேர் கைது

Published On 2022-07-03 08:42 GMT   |   Update On 2022-07-03 08:42 GMT
  • கஞ்சா மற்றும் போதைப்பொருட்களுக்கு சில கல்லூரி மாணவர்கள், வாலிபர்கள் அடிமையாகி வருகின்றனர்.
  • 7 பேரிடம் இருந்து மொத்தம் 550 போதை மாத்திரைகள் பறிமுதல் செய்யப்பட்டது.

கோவை:

கோவையில் கஞ்சா மற்றும் போதைப்பொருட்களுக்கு சில கல்லூரி மாணவர்கள், வாலிபர்கள் அடிமையாகி வருகின்றனர். இதன் விற்பனையை தடுக்க போலீசார் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.

இந்நிலையில் நேற்று போதை மாத்திரை விற்பனை செய்வதாக கிடைத்த தகவலின் பேரில் கோவை கடைவீதி, ரேஸ்கோர்ஸ், போத்தனூர் ஆகிய பகுதிகளில் போலீசார் சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது உக்கடம் ஜி.எம். நகர் பாபா கார்னர் அருகே கஞ்சா மற்றும் போதை மாத்திரை விற்பனை செய்த ஜி.எம். நகர் 2-வது வீதியை சேர்ந்த பவுருதீன் (30) என்பவரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து 100 கிராம் கஞ்சா மற்றும் 70 போதை மாத்திரைகள் பறிமுதல் செய்யப்பட்டது.

இதேபோன்று, பாப்பநாயக்கன்பாளையம் பரமேஸ்வரன் லே-அவுட் அருகே போதை மாத்திரை விற்பனையில் ஈடுபட்ட செல்வபுரம் இந்திரா நகரை சேர்ந்த சிவசூர்யா (26), சாயிபாபா காலனி என்.எஸ்.ஆர் ரோட்டை சேர்ந்த கிஷோர் குமார் (26) ஆகிய 2 பேரை கைது செய்தனர்.

அவர்களிடம் 280 போதைமாத்திரைகள், ஒரு செல்போன் பறிமுதல் செய்யப்பட்டது. இதைத்தொடர்ந்து போத்தனூர் ஜம் ஜம் நகரில் உள்ள மைதானத்தில் போதை மாத்திரை விற்பனையில் ஈடுபட்ட போத்தனூர் மைல்கல் பகுதியை சேர்ந்த அபுபக்கர் சித்திக் (28), குனியமுத்தூர் காந்தி நகரை சேர்ந்த அப்துல் லத்தீப் (27), உக்கடத்தை சேர்ந்த ரஷீத் (33), போத்தனூர் பாரதி நகரை சேர்ந்த சாரூக்கான் (25) ஆகிய 4 பேரை போலீசார் கைது செய்தனர்.

அவர்களிடம் இருந்து 200 போதை மாத்திரைகள், 3 ஊசிகள், மருந்துகள் மற்றும் 2 மோட்டார் சைக்கிளில் பறிமுதல் செய்யப்பட்டது. கைது செய்யப்பட்ட 7 பேரிடம் இருந்து மொத்தம் 550 போதை மாத்திரைகள் பறிமுதல் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News