நாகையில் இருந்து காரைக்காலுக்கு கடத்தி செல்லப்பட்ட 800 கிலோ ரேசன் அரிசி மூட்டைகள் பறிமுதல்
- கடத்தி செல்ல இருந்த ரேஷன் அரிசி மூட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டது.
- அரிசி மூட்டைகளை அங்கேயே விட்டுவிட்டு மர்மநபர்கள் அங்கிருந்து தப்பிச்சென்றனர்.
நாகப்பட்டினம்:
நாகை மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் தமிழக அரசால் வழங்கப்படும் ரேசன் அரிசியை கள்ளச்சந்தையில் விற்பனை செய்வதை தடுக்க துறைசார்ந்த அதிகாரிகள் தொடர் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
அதன்படி மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவலர் பழனிவேல் தலைமையில் அதிகாரிகள் நாகை மாவட்டத்தில் இன்று அதிகாலை முதல் 9 இடங்களில் சோதனை மேற்கொண்டனர்.
அப்போது வேளாங்கண்ணி அருகே பறவை காய்கறி சந்தையில் விற்பனைக்கு வைக்கப்பட்ட ரேசன் அரிசி மூட்டைகள், நாகை பேருந்து நிலையத்தில் இருந்து அரசு பஸ்சில் காரைக்காலுக்கு கடத்தி செல்ல இருந்த ரேசன் அரிசி மூட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டது.
அதிகாரிகளை கண்டதும் அரிசி மூட்டைகளை அங்கேயே விட்டுவிட்டு மர்மநபர்கள் அங்கிருந்து தப்பிச்சென்றனர். அவர்களை அதிகாரி தேடிவருகின்றனர். 32 மூட்டைகளில் பறிமுதல் செய்யப்பட்ட சுமார் 800 கிலோ எடையுள்ள ரேசன் அரிசியை பனங்குடி பகுதியில் உள்ள தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக வட்ட கிடங்கில் அதிகாரிகள் ஒப்படைத்தனர்.
அப்போது பறக்கும்படை துணை வட்டாட்சியர் ரகு, வாணிப கழக தர ஆய்வாளர் பிரபாகரன் அலுவலக உதவிஆய்வாளர்கள் ராமன், பூவரசன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.