உள்ளூர் செய்திகள் (District)

தாயை பிரிந்த குட்டி யானை முதுமலை முகாமுக்கு மாற்றம்

Published On 2024-06-09 05:40 GMT   |   Update On 2024-06-09 05:40 GMT
  • தாயுடன் குட்டியை சேர்க்கும் பணி தோல்வி அடைந்தது.
  • குட்டி யானையை முதுமலை யானைகள் காப்பகத்துக்கு கொண்டு சென்றனர்.

வடவள்ளி:

கோவை மருதமலை வனப்பகுதியில் கடந்த சில நாட்களுக்கு முன்பு உடல் நலம் பாதிக்கப்பட்டு ஒரு பெண் யானை கிடந்தது.

அதன் அருகே ஆண் குட்டி யானை ஒன்றும் இருந்தது. வனத்துறையினர் பெண் யானைக்கு சிகிச்சை அளித்து வனப்பகுதிக்குள் அனுப்பினர். அதற்கு முன்னதாகவே அதன் குட்டி யானை காட்டுக்குள் சென்று விட்டது.

இந்தநிலையில் விராலியூர் அருகே தனியார் தோட்டத்தில் பரிதவிப்புடன் நின்ற குட்டி யானையை வனத்துறையினர் மீட்டனர். அட்டுக்கல் வனப்பகுதியில் தாய் யானையுடன் குட்டியை சேர்க்க முயன்ற போது, தாய் யானை குட்டியை நிராகரித்து விட்டு ஓடிச் சென்றது. இதனால் தாயுடன் குட்டியை சேர்க்கும் பணி தோல்வி அடைந்தது.

பின்னர் குட்டி யானையை வாகனம் மூலம் மருதமலை யானை மடுவு யானை வனப்பகுதிக்கு வனத்துறையினர் கொண்டு வந்து, வேறு காட்டு யானைகள் கூட்டத்துடன் அதனை சேர்க்க முயன்றனர். ஆனால் அந்த யானைகள் சேர்க்கமாமல் விரட்டி விட்டது.

இதையடுத்து வனத்துறையினர் குட்டி யானையை குடியிருப்பு பகுதிக்கு கொண்டு வந்து உணவு கொடுத்து பராமரித்து வந்தனர். நேற்று 4-வது நாளாக மீண்டும் குட்டி யானையை தாய் யானையுடன் சேர்க்கும் பணி நடந்தது. ஆனால் நேற்றும் குட்டி யானையை தாயுடன் சேர்க்கும் பணி தோல்வியில் முடிந்தது.

கடந்த 4 நாட்களுக்கும் மேலாக வனத்துறையினர், குட்டி யானையை அதன் தாய் யானையுடன் சேர்க்க பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொண்டும், அவர்களின் அத்தனை முயற்சிகளும் தோல்வியில் முடிந்தது.

இதையடுத்து வனத்துறையினர் குட்டி யானையை முதுமலை முகாமுக்கு கொண்டு சென்று பராமரிக்க முடிவு செய்தனர். இதற்கான ஏற்பாடுகளும் செய்யப்பட்டு வந்தன.

அதன்படி இன்று அதிகாலை மருதமலை வனச்சரகத்தில் பராமரிக்கப்பட்டு வந்த குட்டி யானையை வனத்துறையினர் வாகனத்தில் ஏற்றினர். பின்னர் குட்டி யானையை நீலகிரி மாவட்டம் முதுமலை யானைகள் காப்பகத்துக்கு கொண்டு சென்றனர். அங்கு குட்டி யானைக்கு சிகிச்சை அளித்து அதனை, பராமரிக்க உள்ளனர்.

Tags:    

Similar News