உள்ளூர் செய்திகள்

மணிமுத்தாறு அருகே மரத்தில் ஏறி நின்ற கரடி

Published On 2024-07-25 06:48 GMT   |   Update On 2024-07-25 06:48 GMT
  • தேனை உண்பதற்காக மரத்தில் ஏறிய கரடி.
  • சுமார் 17 மணிநேரத்திற்கு பிறகு சென்றது.

நெல்லை:

நெல்லை மாவட்டம் மணிமுத்தாறு மற்றும் மேற்கு தொடர்ச்சி மலையடிவாரத்தில் அமைந்துள்ள கிராமங்களுக்குள் அடிக்கடி சிறுத்தை, கரடி உள்ளிட்ட காட்டு விலங்குகள் புகுந்து அட்ட காசத்தில் ஈடுபடுவது வழக்கம்.

பின்னர் அதனை வனத்துறையினர் கூண்டு வைத்து பிடித்து காட்டுப்பகுதியில் கொண்டு விடுவார்கள்.

இந்நிலையில் நேற்று அதிகாலை 5 மணி அளவில் மணிமுத்தாறு மெயின் ரோட்டில் கரடி ஒன்று சாலையை கடந்து சென்றுள்ளது. உடனே அதனை கண்ட மக்கள் அலறியபடி ஓட்டம் பிடித்துள்ளனர். பின்னர் அந்த கரடி அங்கிருந்த பட்டாலியன் கமாண்டர் வீட்டில் புகுந்து அங்கிருந்த மரத்தின் மீது ஏறிக்கொண்டு இறங்காமல் நின்றது.

இதுகுறித்து அறிந்து, அம்பை வனச்சரகர் நித்யா தலைமையிலான வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று கரடியை காட்டுக்குள் விரட்ட முயன்றனர். ஆனால் கரடி இறங்காமல் இரவு வரையிலும் மரத்தின் மீது நின்று கொண்டே இருந்தது. இதையடுத்து வனத்துறையினர் அங்கேயே முகாமிட்டு இருந்தனர்.

இந்நிலையில் நேற்று நள்ளிரவு 12.10 மணிக்கு அந்த கரடி மரத்தில் இருந்து நைசாக இறங்கி காட்டுப்பகுதிக்குள் ஓடியது. அந்த மரத்தில் தேன் கூடு கட்டி இருந்தது. அதனை உண்பதற்காக மரத்தில் ஏறிய கரடி, நள்ளிரவில் தேன் முழுவதையும் சாப்பிட்டுவிட்டு சிறிது நேரம் மரத்திலேயே தூங்கியதாகவும், அதன்பின்னர் இறங்கி சென்றுவிட்டதாகவும் வனத்துறையினர் தெரிவித்தனர்.

சுமார் 17 மணி நேரம் அந்த கரடி மரத்தின் மீதே நின்று கொண்டிருந்த நிலையில், அதன் பின்னர் இறங்கி சென்றுள்ளது. கடந்த மாதம் 16-ந்தேதி இதே இடத்திற்கு கரடி ஒன்று வந்து மரத்தில் ஏறி நின்றுவிட்டு நள்ளிரவில் இறங்கி வனத்துக்குள் சென்றது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News