செங்கோட்டை அரசு மருத்துவமனையில் ரத்த குளிர்சாதன வைப்பறை விரைவில் அமைக்கப்படும்- சுகாதார நல பணிகள் இணை இயக்குநர் தகவல்
- மருத்துவமனையில் உயிரிழந்தவர்களின் உடல்களை வைக்க குளிர்சாதன பெட்டி இல்லாத நிலை நிலவி வந்தது.
- செங்கோட்டை அரசு மருத்துவமனைக்கு குளிர்சாதன பெட்டி நன்கொடையாக வழங்கப்பட்டது.
செங்கோட்டை:
செங்கோட்டை அரசு மருத்துவமனை, தனியார் மருத்துவமனைக்கு இணையாக பல்வேறு வசதிகளோடு அப்பகுதி மக்கள் பயன்பெறும் வகையில் செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் மருத்துவமனையில் உயிரிழந்த வர்களின் உடல்களை வைக்க பயன்படும் குளிர்சாதன பெட்டி இல்லாத நிலை நிலவி வந்தது. இதனையடுத்து தலைமை மருத்துவர் ராஜேஷ் கண்ணன் வேண்டு கோளுக்கிணங்க தொழிலதிபர் காந்தி செல்வின் என்பவர் ரூ. 1 லட்சம் மதிப்பில் குளிர்சாதன பெட்டியை வாங்கி தென்காசி மாவட்ட சுகாதார நல பணிகள் இணை இயக்குனர் டாக்டர் பிரேமலதாவிடம், செங்கோட்டை அரசு மருத்துவமனைக்கு நன்கொடையாக வழங்கினார்.
பின்னர் சுகாதார நல பணிகள் இணை இயக்குனர் பிரேமலதா கூறும்போது, செங்கோட்டை அரசு மருத்துவமனையில் ரத்த குளிர்சாதன வைப்பறை விரைவில் அமைக்கப்படும் என்றார். நிகழ்ச்சியில் செங்கோட்டை அரசு தலைமை மருத்துவர் ராஜேஷ் கண்ணன், மாவட்ட சுகாதார திட்ட ஒருங்கிணைப்பாளர் கார்த்திக் அறிவுடை நம்பி, மருத்துவமனை ஆலோசனைக் குழு உறுப்பினர் ஞானராஜ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.