காரைக்கால் திருநள்ளாறில் குளத்தில் மூழ்கி சிறுவன் பலி
- சபியுல்லா அப்பகுதியில் உள்ள அரசு தொடக்கப் பள்ளியில் 5-ம் வகுப்பு படித்து வந்தான்.
- குளக்கரையில் மகனது ஆடை கிடப்பதைக் கண்டு, குளத்தில் இறங்கி சத்தம் போட்டு தேடினார்.
புதுச்சேரி:
காரைக்காலை அடுத்த திருநள்ளாறில், குளத்தில் குளிக்க சென்ற 9 வயது சிறுவன், தண்ணீரில் மூழ்கி பலியானார். காரைக்காலை அடுத்த திருநள்ளாறு செருமாவிலங்கை பகுதியைச் சேர்ந்தவர் ரம்ஜான் பேகம். இவரது மகன் முகமது சபியுல்லா(வயது 9).இவர் அப்பகுதியில் உள்ள அரசு தொடக்கப் பள்ளியில் 5-ம் வகுப்பு படித்து வந்தான். இந்நிலையில் நேற்று முன்தினம் மாலை, தனது தாய் ரம்ஜான் பேகத்துடன் ஆடு மேய்க்க சென்றுள்ளான். வீட்டின் அருகே உள்ள குளக்கரையில், முகமது சபியுல்லாவை நிற்க வைத்துவிட்டு, ஓடி சென்ற ஆடுகளை மீட்டு வருவதற்காக ரம்ஜான் பேகம் சென்றுள்ளார். அப்போது சிறுவன் முகமது சபியுல்லா, அருகில் உள்ள குளத்தில் இறங்கி குளித்ததாக கூறப்படுகிறது.
அப்போது நீச்சல் தெரியாத முகமது சபியுல்லா தண்ணீரில் மூழ்கி இறந்தான். இதனை தொடர்ந்து குளக்கரைக்கு வந்த ரம்ஜான் பேகம், மகனை காணாது அங்குமிங்கும் தேடினார். குளக்கரையில் மகனது ஆடை கிடப்பதைக் கண்டு, குளத்தில் இறங்கி சத்தம் போட்டு தேடினார். ரம்ஜான் பேகத்தின் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து முகமது சபியுல்லாவை தேடினர். இது குறித்து தகவல் அறிந்த, திருநள்ளாறு சுரக்குடி தீயணைப்பு துறை வீரர்கள் விரைந்து வந்து குளத்தில் இறங்கி தேடி சிறுவனை பிணமாக மீட்டனர். பின்னர் சிறுவனின் உடலை பிரேதபரிசோதனைக்காக காரைக்கால் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து திருநள்ளாறு போலீஸ் இன்ஸ்பெக்டர் அறிவுச்செல்வன் மற்றும் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.