போக்குவரத்து நெருக்கடிக்கு நிரந்தர தீர்வு காண புதியம்புத்தூரில் புறவழிச்சாலை அமைக்க வேண்டும் - பொதுமக்கள் கோரிக்கை
- புதியம்புத்தூர் மெயின் ரோட்டில் அடிக்கடி போக்குவரத்து நெருக்கடி ஏற்படுவதால் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமப்படுகின்றனர்.
- நடுவக்குறிச்சியில் இருந்து மேலமடம் இசக்கி அம்மன் கோவில் வரை பைபாஸ் ரோடு அமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
புதியம்புத்தூர்:
புதியம்புத்தூர் மெயின் ரோட்டில் அடிக்கடி போக்குவரத்து நெருக்கடி ஏற்படுவதால் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமப்படுகின்றனர். இதனால் புதியம்புத்தூருக்கு புறவழிச்சாலை அமைக்க வேண்டும் என்பது பொதுமக்களின் நீண்ட கால கோரிக்கையாக உள்ளது.
போக்குவரத்து நெருக்கடி
புதியம்புத்தூருக்கு மேற்கே உள்ள 60 கிராம மக்களும் தூத்துக்குடிக்கு இந்த ரோடு வழியாகத்தான் செல்ல வேண்டும். மதுரை 4 வழிச்சாலையில் தூத்துக்குடி வரும் லாரிகள் டோல்கேட் கட்டணத்தை தவிர்ப்பதற்காக குறுக்கு சாலையில் இருந்து ஓட்டப் பிடாரம் வழியாக இந்த ரோட்டில் தான் தூத்துக்குடி செல்கின்றன. மேலும் சிலர் ரோட்டில் ஆக்கிரமிப்பு செய்துள்ளனர். இதனால் எந்த நேரமும் மெயின் ரோட்டில் போக்குவரத்து ஏற்படுகிறது.
காலை, மாலை நேரங்களில் மேலமடம்சந்திப்பில் இருந்து நடுவக்குறிச்சி வரை உள்ள ஒரு கிலோ மீட்டர் தூரத்தை கடப்பதற்கு 20 நிமிடங்களுக்கு மேலாகிறது. எனவே மெயின் ரோட்டில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி, சில மின்கம்பங்களை ரோட்டின் ஓரத்தில் மாற்றி அமைக்க வேண்டும்.
புறவழிச்சாலை
போக்குவரத்து நெருக்கடிக்கு நிரந்தர தீர்வு காணும் வகையில் ஊருக்கு வடபுறம் புறவழிச்சாலை அமைப்பதை தவிர வேறு வழி இல்லை. எனவே பொதுமக்கள் நலன் கருதி மாவட்ட நிர்வாகம் நிதி ஒதுக்கீடு செய்து இந்த பைபாஸ் சாலையை உடனடியாக அமைக்க வேண்டும் நடுவக்குறிச்சியில் இருந்து மேலமடம் இசக்கி அம்மன் கோவில் வரை உள்ள 80 அடி ஓடையில் மண் நிரப்பி பைபாஸ் ரோடு அமைத்து புதியம்புத்தூர் மக்களின் நீண்ட கால கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.