தியாகதுருகம் அருகே சமூக வலைதளத்தில் அவதூறு பரப்பியவர் மீது வழக்கு பதிவு
- பொது அமைதியை சீர்குலைக்கும் நோக்கத்திலும் பதிவு வெளியிடப்பட்டிருந்தது.
- பாரபட்சமின்றி நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
கள்ளக்குறிச்சி:
கள்ளக்குறிச்சி மாவட்ட சைபர் கிரைம் போலீசார் மாவட்ட சைபர் வலைதள பக்கத்தை ஆய்வு செய்தனர். அப்போது டிவிட்டர் வலைதளத்தில் கடந்த 4-ந் தேதி சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி அளித்த தீர்ப்பை விமர்சித்தும் அவரது புகைப்படத்தை பகிர்ந்து மதரீதியாக விமர்சித்தும் அதன் மூலம் மத ஒற்றுமையை சீர்குலைக்கும் நோக்கிலும் இரு மதத்தினரிடையே பகைமை உணர்ச்சியும் வெறுப்பையும் தூண்டும் வகையிலும் பொது அமைதியை சீர்குலைக்கும் நோக்கத்திலும் பதிவு வெளியிடப்பட்டிருந்தது.
இது குறித்து விசாரணையில் கள்ளக்குறிச்சி மாவட்டம் விருகாவூர் கிராமத்தைச் சேர்ந்த குப்புசாமி மகன் கட்டிமுத்து என்பவர் இதனை டிவிட்டரில் பதிவிட்டது தெரியவந்தது. அதன்படி கட்டிமுத்து மீது கள்ளக்குறிச்சி மாவட்ட சைபர் கிரைம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்துவருகின்றனர். மேலும் பொது அமைதிக்கும், சட்டம் ஒழுங்கிற்கும் குந்தகம் ஏற்படுத்தும் வகையில் அவதூறு செய்தி பரப்புவோர் மீது காவல் துறை பாரபட்சமின்றி நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.