குத்தகை நிலம் மூலம் விவசாயிகளிடம் நூதன மோசடியில் ஈடுபடும் கும்பல்
- பயிரிட்டு விளையும் பொருட்களில் 70 சதவீதம் குத்தகைதாரருக்கே வழங்கி விடுவதாகவும் கூறுகிறார்.
- உண்மைத் தன்மை குறித்து ஆய்வு செய்ய வேண்டியது அவசியமாகும்.
திருப்பூர் :
விவசாய நிலங்கள் குத்தகை என்ற பெயரில் நூதன மோசடி அரங்கேறி வருவதாக திருப்பூர் விவசாயிகள் குற்றம் சாட்டியுள்ளனர். இதுகுறித்து விவசாயிகள் கூறியதாவது:- விவசாய நிலங்கள் குத்தகை மூலம் அதிக லாபம் பெற முடியும் என்று விவசாயிகளின் ஆசையைத் தூண்டும் விதமாக சென்னை முகப்பேரைச் சேர்ந்த ஒரு நிறுவனத்தினர் பேசுவதாக ஆடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் வேகமாகப் பரவி வருகிறது. இந்த திட்டத்தின் மூலம் விவசாயிகள் யாரும் ஏமாற்றப்பட்டார்களா என்பது குறித்து தெரியவில்லை.
அந்த ஆடியோவில் பெண் ஒருவர் விவசாயி ஒருவரிடம் பேசும் அந்த ஆடியோவில் 10 ஏக்கர் பண்ணை நிலத்தில் விவசாயம் செய்ய இருப்பதாகவும், அதை தலா 22 சென்ட் என 40 பகுதிகளாகப் பிரித்து 22 சென்ட் நிலத்தை ரூ. 2 லட்சத்து 99 ஆயிரத்துக்கு குத்தகைக்கு வழங்குவதாகவும கூறுகிறார்.மேலும் அதில் நெல் மற்றும் காய்கறிகள் பயிரிட்டு விளையும் பொருட்களில் 70 சதவீதம் குத்தகைதாரருக்கே வழங்கி விடுவதாகவும் கூறுகிறார்.அத்துடன் 3 ஆண்டுகளுக்குப் பிறகு குத்தகைத் தொகையை ரூ. 3 லட்சத்து 99 ஆயிரமாக திருப்பித் தருவதாகவும் உறுதி கூறுகிறார்.இன்றைய நிலையில் விவசாய விளை பொருட்களுக்கு போதிய விலை கிடைக்காத நிலை உள்ளது.
இந்த சூழ்நிலையில் வெறும் 30 சதவீத விளை பொருட்களைக் கொண்டு அந்த நிறுவனத்தால் லாபம் ஈட்ட முடியுமா என்பது கேள்விக்குறியாகவே உள்ளது. இதுபோலவே ஈமு கோழியின் முட்டையை ரூ. 2 ஆயிரத்துக்கு வாங்கிக் கொள்கிறோம்.கறியை ஏற்றுமதி செய்கிறோம்.இறகுகளை நல்ல விலைக்கு விற்கலாம் என்று பல கவர்ச்சி விளம்பரங்களின் மூலம் விவசாயிகளிடமிருந்து கோடிக்கணக்கில் பணம் அபகரிக்கப்பட்டது.அதேநிலை இந்த விளம்பரத்தின் மூலமும் ஏற்படலாம்.எனவே இந்த திட்டத்தின் உண்மைத் தன்மை குறித்து ஆய்வு செய்ய வேண்டியது அவசியமாகும்என்று விவசாயிகள் கூறினர்.