உள்ளூர் செய்திகள் (District)

தாண்டிக்குடி- பண்ணைக்காடு மலைச்சாலையில் பஸ் முன்பு தர்ணாவில் ஈடுபட்ட பொதுமக்கள்.

தாண்டிக்குடி-பண்ணைக்காடு மலைச்சாலையில் பழுதாகி நின்ற அரசு பஸ்

Published On 2022-11-07 04:21 GMT   |   Update On 2022-11-07 04:21 GMT
  • பழுதாகி நின்ற இடம், காட்டு யானை, காட்டெருமை போன்ற வன விலங்குகள் நடமாடும் பகுதி என்பதால் பயணிகள் அச்சத்துடன் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டது.
  • பஸ்சின் டிரைவர், கண்டக்டரிடம் பயணிகள் வாக்குவாதம் செய்து பஸ்சின் முன்பு சாலையில் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டனர்.

பெரும்பாறை:

திண்டுக்கல் மாவட்டம் பன்றிமலையில் இருந்து ஆடலூர், கே.சி. பட்டி, குப்பம்மாள்பட்டி, தடியன்குடிசை, மங்களம்கொம்பு தாண்டிக்குடி, பண்ணைக்காடு வழியாக வத்தலகுண்டுவுக்கு அரசு பஸ் இயக்கப்பட்டு வருகிறது.

இந்தநிலையில் பன்றிமலையில் இருந்து வத்தலக்குண்டு நோக்கி அரசு பஸ் சென்று கொண்டிருந்தது. அந்த பஸ்சில் 35 பயணிகள் இருந்தனர். தாண்டிக்குடி-பண்ணைக்காடு இடையே எதிரொலிக்கும்பாறை பகுதியில் வந்தபோது அந்த பஸ் திடீரென்று பழுதடைந்து நின்றுவிட்டது.

இதனால் பஸ்சில் வந்த பயணிகள் அவதியடைந்தனர். மேலும் பஸ் பழுதாகி நின்ற இடம், காட்டு யானை, காட்டெருமை போன்ற வன விலங்குகள் நடமாடும் பகுதி என்பதால் பயணிகள் அச்சத்துடன் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டது.

இதையடுத்து பஸ்சில் பழுது ஏற்பட்டிருப்பதை முன்கூட்டியே பார்க்கக்கூடாதா என்று கூறி பஸ்சின் டிரைவர், கண்டக்டரிடம் பயணிகள் வாக்குவாதம் செய்தனர். மேலும் பஸ்சின் முன்பு சாலையில் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டனர்.

இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இருப்பினும் மாற்று பஸ்சுக்கு போக்குவரத்துக்கழக அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை. இதைத்தொடர்ந்து அந்த வழியாக வந்த சரக்கு வாகனங்களில் லிப்ட் கேட்டு வத்தலக்குண்டுவுக்கு சென்றனர்.

எனவே மலைக்கிராமங்களுக்கு செல்லும் பஸ்கள் அடிக்கடி பழுதாகி வருவதால் மாணவ-மாணவிகள், விவசாயிகள் உள்பட அனைத்து தரப்பினரும் பாதிக்கப்படுகின்றனர். எனவே தரமான பஸ்கள் இயக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

Similar News