காசிமேட்டில் பெரிய வகை மீன்கள் விற்பனைக்கு குவிந்தது
- மீன்கள் வரத்து இன்று அதிகமாக காணப்பட்டது.
- மீன்களை மக்கள் போட்டிபோட்டு வாங்கிசென்றனர்.
ராயபுரம்:
தமிழகத்தில் 61 நாட்கள் அமல்படுத்தப்பட்ட மீன்பிடி தடைகாலம் கடந்த 14-ந்தேதி முடிந்தது. அன்று இரவே காசிமேட்டில் இருந்து விசைப்படகு மீனவர்கள் கடலுக்குள் மீன் பிடிக்கச் சென்றனர்.
கடந்த வாரம் மீன்பிடி தடைகாலம் முடிந்து முதல் ஞாயிற்றுக்கிழமை விசைப் படகு மீனவர்கள் அதிக அளவில் கரை திரும்பாததால் பெரியவகை மீன்கள் விற்பனைக்கு வரவில்லை. மேலும் விலையும் குறையாமல் இருந்தது.
இந்த நிலையில் தடை காலம் முடிந்து 2-வது ஞாயிற்றுக்கிழமையான இன்று காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில் நேற்று இரவு முதலே அதிக அளவு விசைப்படகு மீனவர்கள் கரைக்கு திரும்ப தொடங்கினர்.
சுமார் 100-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் கரைக்கு திரும்பியதால் கடந்த வாரத்தை விட பெரிய மீன்கள் வரத்து இன்று அதிகமாக காணப்பட்டது. வஞ்சிரம், வவ்வால், கடமா, இறால், உள்ளிட்ட மீன்கள் அதிகமாக காணப் பட்டது. இதனால் மீன்கள் விலையும் கடந்த வாரத்தை விட ரூ.50 முதல் ரூ.200 வரை குறைவாக இருந்தது.
கடந்த வாரத்தில் ரூ.1500 வரை விற்கப்பட்ட வஞ்சிரம் மீன் இன்று ரூ.1200-க்கு விற்பனை ஆனது. இதே போல் மற்ற மீன்களில் விலையும் குறைந்து இருந்தது.
இதனால் மீன் பிரியர்கள் தங்களுக்கு பிடித்தமான மீன்களை போட்டிபோட்டு வாங்கிசென்றனர். காசி மேட்டில் மீன்வாங்க அதிகாலை முதலே ஏராளமானோர் குவிந்ததால் கூட்டம் அதிகமாக காணப்பட்டது.
மீன்கள் வரத்து அதிகமாக இருந்ததாலும் நல்ல விற் பனை ஆனதாலும் வியாபாரிகள் மகிழ்ச்சியில் காணப்பட்டனர். கூடுதல் நாட்கள் கடலில் தங்கி மீன் பிடிக்கும் மீனவர்கள் அடுத்த வாரம் கரைக்கு திரும்புவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
எனவே அடுத்தவாரம் இப்போதைய நிலையை விட கூடுதலாக பெரியவகை மீன்கள் விற்பனைக்கு வரும் எனவும், மேலும் விலையும் குறையும் என மீனவர்கள் தெரிவித்து உள்ளனர். காசிமேட்டில் மீன்கள் விலை (கிலோவில்)வருமாறு:-
வஞ்சிரம் - ரூ.1200
வெள்ளை வவ்வால் மீன்- ரூ.1200
கருப்பு வவ்வால் மீன்- ரூ.700
சங்கரா - ரூ.350
ஷீலா - ரூ.250
கிழங்கா - ரூ.300
டைகர் இறால் - ரூ.1000
இறால் - ரூ.300
கடமா - ரூ.300
நண்டு - ரூ.300