விழுப்புரத்தில் பொதுக்கூட்டம், போராட்டம் நடத்த பழைய பஸ் நிலையம் அருகில் புதிய இடம் தேர்வு
- ஒழுங்குபடுத்துதல் தொடர்பான கூட்டம் கலெக்டர் பழனி தலைமையில் நேற்று நடைபெற்றது.
- பொதுமக்கள், மாணவர்கள் மற்றும் போக்குவரத்துக்கு இடையூறாக உள்ளது குறித்து விவாதிக்கப்பட்டது.
விழுப்புரம்:
விழுப்புரம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில், விழுப்புரம் நகராட்சியில் பொதுக்கூட்டங்கள் நடத்துவது, பொது போக்கு வரத்தை ஒழுங்குபடுத்துதல் தொடர்பான கூட்டம் கலெக்டர் பழனி தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில், எம்.எல்.ஏ.க்கள் எம்.சக்கரபானி, அர்ஜுனன், மாவட்ட ஊராட்சி குழுத் தலைவர் ஜெயச்சந்திரன், போலீஸ் சூப்பிரண்டு சசாங் சாய், மாவட்ட வருவாய் அலுவலர் பரமேஸ்வரி, உதவி ஆணையர் (கலால்) சிவா உட்பட அனைத்து கட்சி பிரதிநிதிகள் மற்றும் உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள் கலந்துகொண்டனர். விழுப்புரம் நகரத்தில் உள்ள பழைய பஸ் நிலையம் அருகில் அரசியல் கட்சியினர், ஊழியர் சங்கங்கள் மற்றும் பொதுநல அமைப்பினர்கள் பொது கூட்டங்கள், ஊர்வலங்கள், ஆர்பாட்டங்கள் உள்ளிட்ட நிகழ்ச்சிகளை நடத்துவதால், பொதுமக்கள், மாணவர்கள் மற்றும் போக்குவரத்துக்கு இடையூறாக உள்ளது குறித்து விவாதிக்கப்பட்டது. இதற்கு மாறாக மேற்படி நிகழ்ச்சிகளை நடத்திட உரிய இடத்தினை தெரிவு செய்வது தொடர்பாக ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது.
இதில் விழுப்புரம் பழைய பஸ் நிலைய வளாகத்தில் மேற்படி நிகழ்ச்சிகளுக்கு அனுமதி வழங்குவதில்லை எனவும், விழுப்புரம் புதிய பஸ் நிலையம் அருகில் உள்ள நகராட்சிக்கு சொந்தமான இடத்தில் நிகழ்ச்சிகளை நடத்திட அனுமதி வழங்கிட போலீஸ் துறைக்கு பரிந்துரை செய்யப்பட்டது. புதிய இடத்தில் மேற்படி நிகழ்ச்சிகளை நடத்துவதில் இடர்பாடுகள் ஏதேனும் ஏற்படின் அவற்றை களைவ தற்கான உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் கலெக்டர் பழனி உறுதியளித்தார்.