பாலீஷ் போடுவது போல் நடித்து நகை மோசடியில் ஈடுபட முயன்ற வடமாநில வாலிபர்
- வானூர் போலீசாரிடம் ஒப்படைத்த கிராம மக்கள்
- ஒவ்வொரு வீடாக சென்று நகை பாலீஷ் போட வேண்டுமாக எனக் கேட்டார்.
விழுப்புரம்:
பீகார் மாநிலத்தை சேர்ந்தவர் பிந்துராம் (வயது 40). இவர் விழுப்புரம் மாவட்டம் வானூர் பகுதியில் தங்கியுள்ளார். வீடு வீடாக சென்று நகை பாலீஷ் போடும் தொழில் செய்கிறார். இவர் வானூரை அடுத்த எடப்பாளையம் கிராமத்திற்கு நேற்று சென்றார். அங்கு ஒவ்வொரு வீடாக சென்று நகை பாலீஷ் போட வேண்டுமாக எனக் கேட்டார்.
அப்போது அக்கிராமத்தை சேர்ந்த சக்திவேல் மனைவி தனலட்சுமி (வயது 36), கைகளில் அணியும் தங்க வளையலுக்கு பாலீஷ் போட்டு தரும்படி கொடுத்தார். இதனை வாங்கிய பிந்துராம், தான் வைத்திருந்த ஒரு திரவத்தில் தங்க வளையலை போட்டு எடுத்தார்.வெளியில் எடுத்தபோது தங்க வளையல் 3 துண்டுகளாக வந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த தனலட்சுமி, பிந்துராமிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இதனைக் கண்ட அப்பகுதி மக்கள் அங்கு திரண்டனர். இதனால் பயந்து போன பிந்துராம் முன்னுக்கு பின் முரணான தகவல்களை பொதுமக்களிடம் கூறினார்.
சந்தேகமடைந்த பொதுமக்கள் பிந்துராமை பிடித்து சென்று வானூர் போலீசாரிடம் ஒப்படைத்தனர். விசாரணையில் பிந்துராம், நகை பாலீஷ் போடுவது போல நடித்து மோசடியில் ஈடுபட்டது தெரியவந்தது. இதையடுத்து பிந்துராமை கைது செய்த வானூர் போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். வடமாநில வாலிபர் தங்க நகையை பாலீஷ் போடுவது போல நடித்து மோசடி செய்ய முயன்ற சம்பவம் அப்பகுதி மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.