காரமடையில் மோட்டார் சைக்கிளுக்குள் புகுந்த பாம்பு
- வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு 1 மணி நேரத்திற்கு மேலாகியும் வரவில்லை.
- பொது மக்களே வாகனத்தில் இருந்த பாம்பை 2 மணி நேரம் போராடி பத்திரமாக மீட்டனர்.
மேட்டுப்பாளையம்,
கோவை காரமடை அரங்கநாதர் கோவில் முன் ஊர்கவுண்டர் வீதியை சேர்ந்தவர் கிரி. இவரது மனைவி பூரணி.
நேற்று இவர்களது வீட்டின் முன்பு 4 அடி நீளமுள்ள நாகப்பாம்பு வந்தது. இதனை பார்த்த அப்பகுதியினர் சத்தம் போட பாம்பு, கிரியின் வீட்டு வாசலில் நின்றிருந்த இருசக்கர வாகனத்தினுள் நுழைந்தது.
குழந்தைகள் அதிகளவில் உள்ளதால் இதுதொடர்பாக உடனடியாக காரமடை வனத்துறையினருக்கு மக்கள் தகவல் தெரிவித்துள்ளனர்.
காரமடை வனத்துறை அலுவலகத்திற்கும் ஊர்கவுண்டர் வீதிக்கும் 500 மீட்டர் தொலைவு தான் இருக்கும். ஆனால் வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு 1 மணி நேரத்திற்கு மேலாகியும் வரவில்லை.
இதையடுத்து வேறு வழியில்லாமல் பொது மக்களே வாகனத்தில் இருந்த பாம்பை 2 மணி நேரம் போராடி பத்திரமாக மீட்டனர்.
இதையடுத்து அந்த பாம்பை காரமடை வனத்துறையிடம் ஒப்படைத்தனர்.
பொதுமக்கள் குடியிருப்பில் பாம்பு நுழைந்ததாக வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தும் வனத்துறையினர் அலட்சியமாக நடந்து கொண்டது பொதுமக்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.