இரும்புபாலம் அருகே விவசாய நிலத்தில் திடீர் தீ
- அறுவடைக்காலம் முடிந்து நிலத்தை உழுது சமன் செய்ய இருந்தார். கடும் வெயிலின் காரணமாக நிலத்தில் பயிர்கள் காய்ந்து இருந்தது. இதனால் விவசாய நிலத்தில் திடீரென தீ பிடித்தது.
- சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று 1 மணி நேரத்திற்கும் மேலாக போராடி தீயை அணைத்தனர்.
பரமத்திவேலூர்:
நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் தாலுகா இரும்புப்பாலம் அடுத்த செங்கோடம்பாளையம் செல்லும் வழியில் ஏராளமான ஏக்கரில் மானாவரி சாகுபடி செய்யும் விவசாய நிலங்கள் உள்ளன.
இதில் மக்காசோளம், உளுந்து, வேர்க்கடலை உள்ளிட்ட பல்வேறு பயிர் வகைகள் பயிரிடப் பட்டுள்ளன. இந்த நிலையில் அப்பகுதியை சேர்ந்த வேலுசாமி என்பவரது நிலத்தில், அறுவடைக்காலம் முடிந்து நிலத்தை உழுது சமன் செய்ய இருந்தார். கடும் வெயிலின் காரணமாக நிலத்தில் பயிர்கள் காய்ந்து இருந்தது.
இந்த விவசாய நிலத்தில் திடீரென தீ பிடித்தது. காற்றின் வேகம் காரணமாக தீ மளமளவென அருகில் இருந்த விவசாய நிலங்களுக்கும் பரவியது. அக்கம் பக்கத்தில் இருந்த வர்கள் ஓடி வந்து தீயை அணைக்க முயற்சி செய்தனர்.
இருப்பினும் தீயை அணைக்க முடியவில்லை. இதுகுறித்து திருச்செங்கோடு தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவலின்அடிப்படையில் நிலைய அலுவலர் குணசேகரன் தலைமையிலான தீயணைப்பு வீரர்கள், சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று 1 மணி நேரத்திற்கும் மேலாக போராடி தீயை அணைத்தனர்.
இந்த திடீர் தீவிபத்திற்கு காரணம் மர்ம நபர்களா? அல்லது கடுமையான வெயிலின் காரணமாக தீவிபத்து ஏற்பட்டதா? என்பது குறித்து நல்லூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்