- கோழிக்கடையின் உரிமையாளர் ஆறுமுகம் சி.சி.டிவி கேமராவில் பார்த்துள்ளார்.
- 4 பேர் தப்பி சென்று விட்டதாகவும் கூறப்படுகிறது.
நாகப்பட்டினம்:
நாகப்பட்டினம் மாவட்டம் வேளாங்கண்ணி அருகே உள்ள பூவைத்தேடி பேருந்துநிலையம் வடக்கு புறம் அருகே உள்ள ஆறுமுகம் என்பவர் கோழிக்கடை நடத்தி வருகிறார்.
இந்த கோழிக்கடையில் சிசிடிவி காமிராக்கள் பொறுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில் கடையில் யாரும் இல்லாத போது கடையின் பூட்டை உடைத்து கொண்டு மர்மநபர் ஒருவர் உள்ளே சென்று அங்குள்ள கல்லாப்பெட்டியை எடுக்க முயன்றுள்ளார்.
இதை வீட்டில் இருந்த படி கோழிக்கடையின் உரிமையாளர் ஆறுமுகம் சி.சி.டிவி கேமராவில் பார்த்துள்ளார்.
உடனடியாக அருகில் இருந்தவர்களை கடையில் போய் பார்க்க கூறியுள்ளார்.
அவர்கள் வந்து பார்த்தபோது வடமாநில இளைஞர் ஒருவர் கோழிக்கடையில் உள்ளே நின்றது தெரிய வந்தது.
உடனே பொதுமக்கள் அவரை பிடித்து அருகில் இருந்த வேப்பமரத்தில் கட்டி வைத்து, கீழையூர் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.
தகவலின் பெயரில் காவல்துறையினர் அவரை மீட்டு காவல் நிலையத்திற்கு அழைத்து சென்றனர் விசாரணையில் அவர் மத்திய பிரதேசத்தைச் சேர்ந்த ராஜ்பவன் என்பதும் சில தினங்களுக்கு முன்பு இதே பகுதியில் ஒரு வீட்டில் புகுந்து திருட முயன்றதும் விசாரணையில் தெரியவந்துள்ளது.
மேலும் இவருடன் 5 பேர் வந்ததாகவும், அதில் 4 பேர் தப்பி சென்று விட்டதாகவும் கூறப்படுகிறது.
இது குறித்து கீழையூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.