சங்கரன்கோவிலில் ஜவுளி வியாபாரி தூக்குப்போட்டு தற்கொலை
- சங்கர், தனது வீட்டை விற்று லட்சக்கணக்கில் பங்கு சந்தையில் முதலீடு செய்துள்ளார்.
- வேட்டியால் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட நிலையில் சங்கர் பிணமாக தொங்கி கொண்டிருந்தார்.
சங்கரன்கோவில்:
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் புதுமனை 3-வது தெருவை சேர்ந்தவர் சங்கர்(வயது 45). இவர் ஜவுளி வியாபாரியான இவர் இந்து முன்னணி நிர்வாகியாகவும் இருந்து வந்தார். இவர் பங்கு சந்தையில் ஆர்வம் காட்டி வந்ததாக கூறப்படுகிறது.
பங்குசந்தையில் முதலீடு
கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பாக இவர் தனது வீட்டை விற்று லட்சக்கணக்கில் பங்கு சந்தையில் முதலீடு செய்துள்ளார். இந்நிலையில் பங்கு சந்தையில் சரிவு ஏற்பட்டதால், அவரது பங்கு சரிவு ஏற்பட்டு நஷ்டம் அடைந்ததாகவும், அதனை சரிசெய்ய வேறு இடங்களில் கடன் வாங்கி முதலீடு செய்து அந்த பணத்தையும் அவர் இழந்துவிட்டதாக கூறப்படுகிறது.
இதனால் மனம் உடைந்து காணப்பட்ட சங்கர், கடந்த 2 நாட்களாக யாரிடமும் பேசாமல் இருந்து வந்த நிலையில், நேற்று மதியம் தனது அறைக்குள் சென்று கதவை பூட்டிக்கொண்டார். இரவு நேரம் வரை அவர் அறை திறக்கப்படவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த அவரது உறவினர்கள் கதவை தட்டி பார்த்துள்ளனர். ஆனால் கதவை திறக்காததால், ஜன்னல் வழியாக எட்டிப்பார்த்துள்ளனர்.
அப்போது அவர் வேட்டியால் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட நிலையில் பிணமாக தொங்கி கொண்டிருந்தார்.
இதனை பார்த்த அவரது மனைவி சண்முகப்பிரியா கதறி அழுதார். தகவல் அறிந்து அங்கு வந்த சங்கரன்கோவில் டவுன் போலீசார், சங்கர் உடலை மீட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.