பண்ருட்டியில் சென்டர் மீடியனில் மோதி வேன் விபத்துக்குள்ளானது
- 12 பேர் மேல்மருவத்தூருக்கு செல்வதற்காக நேற்று இரவு புறப்பட்டு வேன் ஒன்றில் வந்தனர்.
- டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த வேன் சாலையின் நடுவில் இருந்த சென்டர் மீடியன் கட்டையில் பயங்கர வேகத்தில் மோதியது
கடலூர்:
திருவாரூர் மாவட்டம் புத்தூர் கிராமத்தைச் சேர்ந்த 12 பேர் மேல்மருவத்தூருக்கு செல்வதற்காக நேற்று இரவு புறப்பட்டு வேன் ஒன்றில் வந்தனர். இந்த வேனை அதே ஊரை சேர்ந்த டிரைவர் கணேசமூர்த்தி (வயது 25) ஓட்டி வந்தார். இந்த வேன் இன்று அதிகாலை 5.30 மணிக்கு பண்ருட்டி-கும்பகோணம் சாலை அரசு ஆஸ்பத்திரி அருகே வந்தது. அப்போது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த வேன் சாலையின் நடுவில் இருந்த சென்டர் மீடியன் கட்டையில் பயங்கர வேகத்தில் மோதியது. மோதிய வேகத்தில் வேன் டயர் வெடித்து சிதறியது. இதனால் தாறுமாறாக சிறிது தூரம் ஓடிய வேன் மீண்டும் தடுப்பு கட்டையில் மோதி இதில் வேனில் பயணம் செய்த செவ்வாடை பத்தர்கள் லேசான காயத்து டன் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.
இதனால் பண்ருட்டி -கும்பகோணம் சாலையில் சிறிது நேரம் போக்குவரத்து பாதித்தது. இது பற்றி தகவல் அறிந்த ரோந்து போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். பொக்லைன் எந்திரம் வரவழைக்கப்பட்டு சாலையில் இருந்த வேன் அப்புறப்படுத்தப்பட்டு போக்குவரத்து சரி செய்யப்பட்டது. இது குறித்து போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் பரமேஸ்வர பத்மநாபன், பண்ருட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் கண்ணன் மற்றும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். பண்ருட்டி கும்பகோணம் சாலையிலுள்ள சென்டர் மீடியனில் அடிக்கடி விபத்து ஏற்படுவதால் இதற்கு நிரந்தர தீர்வு காணும் வகையில் ஏதேனும் நடவடிக்கை எடுக்கவேண்டுமென சமூக ஆர்வலர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். பண்ருட்டி போலீசார் பொக்லைன் எந்திரம் மூலம் வேனை அப்புறப்படுத்தி போக்குவரத்தை சரி செய்தனர்