வாளால் 'கேக்' வெட்டி பிறந்தநாள் கொண்டாடிய கட்சி பிரமுகர்
- இதுபோன்ற செயல்களை தடுக்க போலீசாரும் உடனடி நடவடிக்கை எடுத்து சம்மந்தப்பட்டவர்களை கைது செய்து வருகின்றனர்.
- தனது பலத்தை நிரூபிப்பதற்காக ஆட்களை கூட்டி வாளால் கேக் வெட்டிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
மதுரை:
தமிழகத்தில் அண்மை காலமாக பிறந்தநாள் விழாக்கள் விமரிசையாக கொண்டாடப்படுகிறது. பணக்காரர்கள் மட்டுமின்றி நடுத்தரவர்கத்தினரும் பிறந்தநாள் விழாக்களை மண்டபத்தில் வைத்து கொண்டாடுகிறார்கள்.
அப்போது உற்சாக பெருக்கத்தில் இளைஞர்கள் அச்சுறுத்தும் வகையில் செய்யும் செயல்கள் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது. குறிப்பாக கேக் வெட்டுவதற்கு அரிவாள், வாள் போன்றவற்றை பயன்படுத்துகின்றனர்.
தங்கள் பகுதிகளில் 'கெத்து' காட்டுவதற்காக பிறந்தநாள் விழாக்களில் இதுபோன்ற அடாவடி செயல்களில் சிலர் ஈடுபடுவது தொடர்கதையாக உள்ளது. இதில் கட்சி பிரமுகர்கள், ரவுடிகளும் அடங்குவர். தமிழகத்தில் தொடர்ந்து நடைபெறும் இதுபோன்ற செயல்களை தடுக்க போலீசாரும் உடனடி நடவடிக்கை எடுத்து சம்மந்தப்பட்டவர்களை கைது செய்து வருகின்றனர்.
இந்த நிலையில் மதுரையில் கட்சி பிரமுகர் பிறந்தநாள் விழாவின் போது தனது பலத்தை நிரூபிப்பதற்காக ஆட்களை கூட்டி வாளால் கேக் வெட்டிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இது குறித்த விவரம் வருமாறு:-
மதுரை செல்லூர் பகுதியை சேர்ந்தவர் முத்துமணி. ஒரு கட்சியின் முக்கிய நிர்வாகியாக உள்ள இவர். தனது பிறந்தநாளை விமரிசையாக கொண்டாட திட்டமிட்டார். அதற்காக அந்த பகுதி முழுவதும் தனது ஆதரவாளர்களை வைத்து பிளக்ஸ், போஸ்டர் மூலம் ஒட்டினார்.
சம்பவத்தன்று அங்குள்ள திருமண மண்டபத்தில் முத்துமணியின் பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது. கட்சியில் உள்ள ஆதரவாளர்கள் மற்றும் முக்கிய பிரமுகர்களை அழைத்திருந்த முத்துமணி, அவர்களது முன்னிலையில் பிறந்தநாள் கேக்கை நீண்ட வாளால் வெட்டி கொண்டாடினார்.
அப்போது ஆட்டம், பாட்டத்துடன் அவரது ஆதரவாளர்கள் கோஷமிட்டு வாழ்த்தினர். மேலும் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையிலும் சிலர் நடந்து கொண்டனர். வாளால் முத்துமணி பிறந்தநாள் கேக் வெட்டும் வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவியது.
இதையடுத்து விழித்துக் கொண்ட போலீசார், முத்துமணி மீது வழக்குப்பதிவு செய்து அவரை தேடி வருகின்றனர்.