விக்கிரவாண்டி அங்காளம்மன் கோவிலில் ஆடி அமாவாசை ஊஞ்சல் உற்சவம்: ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்
- வேண்டுதலை நிறைவேற்ற ஆடு, கோழி ஆகியவற்றை பலியிட்டு அம்மனுக்கு படையல் போட்டு வேண்டிக்கொண்டனர்.
- அம்மன் ஊஞ்சலில் அமர்ந்து, உடுக்கை, பம்பை சத்தத்துடன் பக்தர்களுக்கு காட்சியளித்தார்.
விழுப்புரம்:
விக்கிரவாண்டியில் உள்ள ஸ்ரீ அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவிலில் ஆடி அமாவாசையை யொட்டி ஊஞ்சல் உற்சவ திருவிழா நடைபெற்றது. இதையொட்டி காலை அம்மனுக்கும் மற்றும் பெரியாயி அம்மனுக்கும் சிறப்பு அபிஷேகங்கள் அலங்காரங்கள் செய்யப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். அதைத் தொடர்ந்து மாலை அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்து வைக்கப்பட்டு பூஜைகள் நடைபெற்றது. இதில் ஏராளமானவர்கள் பக்தர்கள் கலந்து கொண்டு தங்கள் வேண்டுதலை நிறைவேற்ற ஆடு, கோழி ஆகியவற்றை பலியிட்டு அம்மனுக்கு படையல் போட்டு வேண்டிக்கொண்டனர்.
அதைத் தொடர்ந்து இரவு 11 மணிக்கு அம்மன் ஊஞ்சல் உற்சவம் நடைபெற்றது. இதில் சிறப்பு அலங்காரத்தில் அம்மன் ஊஞ்சலில் அமர்ந்து, உடுக்கை, பம்பை சத்தத்துடன் பக்தர்களுக்கு காட்சியளித்தார். இதில் ஏராளமானவர்கள் பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். அதன் பின்பு பக்தர்களுக்கு அருள் பிரசாதம் வழங்கப்பட்டது.நிகழ்ச்சியை விக்கிரவாண்டி பருவத ராஜகுலத்தார் மற்றும், கோயில் தர்மகர்த்தாக்கள், பொதுமக்கள் முன்னின்று செய்திருந்தனர்.