சங்கரன்கோவிலில் ஆடித்தபசு தேரோட்டம்: திரளான பக்தர்கள் பங்கேற்பு
- தபசு காட்சி வருகிற 21-ந்தேதி நடக்கிறது.
- திரளான பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனர்.
சங்கரன்கோவில்:
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் சங்கரநாராயணசுவாமி கோவிலில் ஆடித்தபசு திருவிழா கடந்த 11-ந் தேதி கோமதி அம்பாள் சன்னதி முன்பு அமைந்துள்ள தங்கக்கொடி மரத்தில் கொடியேற்றத்துடன் தொடங்கியது.
விழா நாட்களில் அம்பாள் தினமும் காலை, மாலை நேரங்களில் பல்வேறு வாகனங்களில் வீதி உலா வரும் நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது. மேலும் கோவில் கலையரங்கத்தில் சொற்பொழிவு, பக்தி கச்சேரி உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகிறது. முக்கிய நிகழ்ச்சிகளில் ஒன்றான தேரோட்டம் இன்று காலை நடைபெற்றது.
இதனை முன்னிட்டு வருவாய் மற்றும் பேரிடர் மீட்பு துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன், டாக்டர் ராணி ஸ்ரீகுமார் எம்.பி., தென்காசி மாவட்ட கலெக்டர் கமல் கிஷோர், தென்காசி வடக்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் ராஜா எம்.எல்.ஏ., நகராட்சி சேர்மன் உமாமகேஸ்வரி ஆகியோர் தேரை வடம் பிடித்து தேரோட்டத்தை தொடங்கி வைத்தனர்.
தேரோட்டத்தில் அ.தி. மு.க. முன்னாள் அமைச்சர் ராஜலெட்சுமி, கோவில் துணை ஆணையர் கோமதி, நகராட்சி கமிஷனர் சபாநாயகம், அறங்காவலர் குழு தலைவர் சண்முகையா மற்றும் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
பாதுகாப்பு ஏற்பாடுகளை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுரேஷ்குமார் தலைமையில் போலீசார் செய்திருந்தனர்.
முக்கிய நிகழ்ச்சியான தபசு காட்சி 11-ம் திருவிழாவான வருகிற 21-ந்தேதி நடக்கிறது. அன்று மாலை 6 மணிக்கு தெற்கு ரதவீதியில் சங்கரலிங்கசுவாமி கோமதி அம்பாளுக்கு சங்கரநாராயணராக காட்சி கொடுக்கும் நிகழ்ச்சி நடக்கிறது.
நிகழ்ச்சி ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் மற்றும் மண்டக படிதாரர்கள் செய்து வருகிறார்கள்.