கோவில் தேர் மீது கார் மோதி ஒருவர் பலி
- காரில் பயணித்த மற்ற 3 பேரும் பலத்த காயங்களுடன் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தனர்.
- போதையில் காரை ஓட்டியதே விபத்துக்கு காரணம் என்ற ரீதியில் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
ராஜபாளையம்:
தென்காசி மாவட்டம் சிவகிரி இந்திரா தெற்கு தெருவை சேர்ந்தவர் ஜெய் கணேஷ் (வயது 25). இவர் மற்றும் இவரது நண்பர்களான வனராஜ், சுப்புராஜ், மகேஷ் ஆகிய 4 பேரும் சொந்த வேலை காரணமாக சிவகிரியில் இருந்து ராஜபாளையம் வந்திருந்தனர்.
இதையடுத்து மீண்டும் ஊருக்கு புறப்படும் முன்பாக ராஜபாளையத்தில் இருந்து தென்காசி செல்லும் சாலையில் அமைந்துள்ள நட்சத்திர பாரில் அமர்ந்து மது அருந்தியுள்ளனர். தொடர்ந்து அங்குள்ள ஓட்டலில் சாப்பிட்டுவிட்டு சிவகிரிக்கு நள்ளிரவு சுமார் 1 மணிக்கு காரில் புறப்பட்டனர். காரில் பயணித்த 4 பேருமே மதுபோதையில் நிதானமின்றி இருந்துள்ளனர்.
இந்தநிலையில் அவர்களது கார் தென்காசி தேசிய நெடுஞ்சாலையில் தேவதானம் ஊருக்குள் சென்றது. வழியெங்கும் சாலையின் இருபுறமும் அலசியவாறு தாறுமாறாகவே கார் சென்றது. இதற்கிடையே சாலையோரம் நிறுத்தப்பட்டிருக்கும் பெரிய கோவில் எனப்படும் பிரசித்தி பெற்ற நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோவிலுக்கு சொந்தமான தேர் மீது மின்னல் வேகத்தில் சென்ற கார் பயங்கரமாக மோதியது.
இதில் காரை ஓட்டிச் சென்ற ஜெய்கணேஷ் காருக்கு உள்ளேயே இடிபாடுகளுக்குள் சிக்கி முகம் சிதைந்து பரிதாபமாக உயரிழந்தார். மேலும் காரில் பயணித்த மற்ற 3 பேரும் பலத்த காயங்களுடன் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தனர். சத்தம் கேட்டு தேவதானம் பகுதியை சேர்ந்தவர்கள் தூக்கத்தில் இருந்து பதறியடித்துக்கொண்டு எழுந்து ஓடி வந்தனர்.
மேலும் அவர்கள் கொடுத்த தகவலின் பேரில் ராஜபாளையம் தீயணைப்பு நிலைய அலுவலர் சீனிவாசன் தலைமையில் தீயணைப்பு நிலை வீரர்கள் விரைந்து வந்து தேருக்குள் சிக்கியிருந்த காரை வெளியே எடுத்து காயம் அடைந்தவர்களை மீட்டு ராஜபாளையம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதில் வனராஜ், மகேஷ் இருவரும் உயிருக்கு ஆபத்தான நிலையில் நெல்லை பாளையங்கோட்டை அரசு மருத்துவமனைக்கு தீவிர சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். இது குறித்து சேத்தூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். அளவுக்கு அதிகமான போதையில் காரை ஓட்டியதே விபத்துக்கு காரணம் என்ற ரீதியில் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.