சென்னை லாட்ஜுகளில் அதிரடி வேட்டை: குற்றவாளிகளை அடையாளம் காட்டும் கேமரா மூலமாக 4123 பேரிடம் சோதனை
- கமிஷனர் சங்கர் ஜிவால் உத்தரவின் பேரில் அவ்வப்போது லாட்ஜில் சோதனை நடத்தப்பட்டு வருகிறது.
- லாட்ஜுகளில் தங்கி இருப்பவர்கள் ஆயுதங்கள், போதை பொருட்களை பதுக்கி வைத்துள்ளார்களா? என்றும் சோதனை மேற்கொள்ளப்பட்டது.
சென்னை:
சென்னையில் குற்றச் செயல்களை தடுக்கவும் தலைமறைவாக உள்ள பழைய குற்றவாளிகளை வேட்டையாடி கைது செய்யவும் போலீசார் அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்கள்.
இதன் ஒரு பகுதியாக கமிஷனர் சங்கர் ஜிவால் உத்தரவின் பேரில் அவ்வப்போது லாட்ஜில் சோதனை நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் சென்னை மாநகரம் முழுவதும் நேற்று முன்தினம் இரவு போலீசார் லாட்ஜுகள், தங்கும் விடுதிகளில் சோதனை நடத்தினர். 377 லாட்ஜுகள் மற்றும் 100 மேன்சன்களில் போலீசார் சோதனை நடத்தினர். இதில் சந்தேகத்துக்கிடமாக யாராவது தங்கி இருக்கிறார்களா? என்பது பற்றி ஆய்வு செய்யப்பட்டது. லாட்ஜுகளில் தங்கி இருப்பவர்கள் எதற்காக அறை எடுத்து உள்ளனர்? அவர்களது முகவரி சரியானதுதானா? என்பதை எல்லாம் போலீசார் ஆய்வு செய்தனர். இது தொடர்பாக லாட்ஜ் உரிமையாளர்கள் மற்றும் மேலாளர்களிடம் விசாரணை நடத்தப்பட்டது. பழைய குற்றவாளிகளின் முகத்தை அடையாளம் காட்டும் கேமராவையும் போலீசார் பயன்படுத்தினர்.
இதில் 4123 பேர் சோதனைக்கு உட்படுத்தப்பட்டனர். இதில் 4 பழைய குற்றவாளிகள் அடையாளம் காணப்பட்டனர். பிடிபட்ட இந்த குற்றவாளிகள் போலீசாரின் விசாரணை வளையத்துக்குள் கொண்டு வரப்பட்டுள்ளனர்.
லாட்ஜுகளில் தங்கி இருப்பவர்கள் ஆயுதங்கள், போதை பொருட்களை பதுக்கி வைத்துள்ளார்களா? என்றும் சோதனை மேற்கொள்ளப்பட்டது. சந்தேக நபர்கள் அல்லது பொருட்கள் குறித்து தகவல் அறிந்தால் உடனே காவல்துறைக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் என்றும், உரிய அடையாள சான்று இல்லாத நபர்களுக்கு அறைகள் கொடுக்க வேண்டாம் எனவும் லாட்ஜ் உரிமையாளர்கள் மற்றும் மேலாளர்களுக்கு அறிவுரைகள் வழங்கப்பட்டது.
லாட்ஜுகளில் சோதனை நடத்தப்பட்ட அதே நேரத்தில் வாகன சோதனையும் தீவிரமாக நடைபெற்றது. சென்னை மாநகரம் முழுவதும் 7195 வாகனங்கள் சோதனைக்கு உட்படுத்தப்பட்டன. இதில் மது போதையில் வாகனங்களை ஓட்டியதாக மொத்தம் 60 பேர் பிடிபட்டனர். இது தவிர விதிமீறல் வாகனங்களும் சிக்கின. மொத்தம் 142 வாகனங்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. 517 வாகனங்களின் பதிவு எண்கள் சரிபார்க்கப்பட்டதில் முறைகேடாக இயங்கிய 3 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. போலீசாரின் இந்த வேட்டை தொடரும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.