பள்ளி மாணவர்களுக்கு கஞ்சா விற்பனை- 2 பெண்கள் உள்பட 3 பேரை கைது
- போலீசார் அவர்களை பிடித்து சோதனை செய்து கஞ்சா மற்றும் மோட்டார் சைக்கிளை பறிமுதல் செய்தனர்.
- போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஸ்ரீவில்லிபுத்தூர்:
சமீப காலமாக தமிழகத்தில் பள்ளி, கல்லூரி மாணவர்களை குறிவைத்து கஞ்சா மற்றும் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை அதிகரித்துள்ளதாகவும், அதன் காரணமாக மாணவர்களின் எதிர்காலம் பாதிக்கப்படுவதாகவும் தொடர்ந்து புகார்கள் வந்த வண்ணம் உள்ளது.
இதையடுத்து கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வரும் சமூக விரோத கும்பலை கூண்டோடு கைது செய்து இளையதலை முறையினரின் நலன் காக்கப்பட வேண்டும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். சென்னையில் நேற்று நடந்த கலெக்டர்கள் மாநாட்டிலும் அவர் இதனை வலியுறுத்தி உள்ளார்.
அதன்பேரில் போதைப் பொருள் தடுப்பு பிரிவு போலீசார் மாநிலம் முழுவதும் தீவிர கண்காணிப்பு மற்றும் சோதனை பணியினை மேற்கொண்டுள்ளனர். இதில் தினமும் கிலோ கணக்கில் கஞ்சா மற்றும் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு வருகின்றன.
இருந்தபோதிலும் ஒருசில இடங்களில் துணிச்சலாக கஞ்சா விற்பனை நடைபெற்றுக்கொண்டு தான் இருக்கிறது. அந்த வகையில், ஸ்ரீவில்லிபுத்தூர் டவுன் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ராமர் தலைமையிலான போலீசார் மங்காபுரம் பகுதியில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு இருந்தனர்.
அப்போது மங்காபுரம் பகுதியில் உள்ள ஒரு மேல்நிலைப்பள்ளி அருகில் ஸ்ரீவில்லிபுத்தூர் அய்யம்பட்டி பகுதியைச் சேர்ந்த வாசு (வயது 37), அதே பகுதியைச் சேர்ந்த சத்யா (39), அனுசுயா (32) ஆகிய மூன்று பேரும் மனித உயிருக்கு ஆபத்தை விளைவிக்கும் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட கஞ்சா 430 கிராமை வைத்து ஒரு மோட்டார் சைக்கிள் அருகில் நின்று கொண்டிருந்தனர்.
போலீசார் அவர்களை பிடித்து சோதனை செய்து கஞ்சா மற்றும் மோட்டார் சைக்கிளை பறிமுதல் செய்தனர். பின்னர் மூன்று பேரிடமும் விசாரித்ததில், வாசு கஞ்சாவை விற்பனைக்காக வெளியூரில் இருந்து கொண்டு வந்து சத்யா மற்றும் அனுசுயாஆகிய இருவரிடம் கொடுத்ததாகவும், அதனை அவர்கள் மாணவர்கள் உள்ளிட்டோருக்கு விற்பனை செய்ய இருந்ததாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
இதனைத் தொடர்ந்து ஸ்ரீவில்லிபுத்தூர் டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் சங்கர் கண்ணன் கஞ்சாவை கடத்தி வந்த வாசு, சத்யா, அனுசியா ஆகிய 3 பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்.