உள்ளூர் செய்திகள்

வனத்துறை அமைச்சர் கா.ராமசந்திரன் தலைமையில் ஆய்வுக் கூட்டம் 

பழங்குடியின மக்களுக்கு வேலை வாய்ப்புகள் வழங்க நடவடிக்கை- அமைச்சர் ராமசந்திரன் தகவல்

Published On 2022-06-28 19:57 GMT   |   Update On 2022-06-28 19:57 GMT
  • பழங்குடியினர் அடிப்படை வசதிக்காக ரூ.394.69 கோடியில் திட்டப் பணிகள்.
  • பழங்குடியின மக்கள் வாழ்வாதாரத்தை பெருக்கிட வனத்துறை நடவடிக்கை.

தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

சென்னை சைதாப்பேட்டை பனகல் மாளிகையில் உள்ள வனத்துறை கூட்ட அரங்கில் தமிழக வனத்துறை அமைச்சர் கா.ராமசந்திரன் தலைமையில் வனத்துறை அலுவலர்கள் பங்கேற்ற ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.

தமிழகத்தின் வனப்பகுதியில் வசிக்கும் பழங்குடியினர் அடிப்படை வசதிக்காக ரூ.394.69 கோடியில் இணைப்புச் சாலைகள், தெரு விளக்குகள், குடிநீர் திட்டப் பணிகளை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இதற்காக வனத்துறை மற்றும் ஆதிதிராவிடர், பழங்குடியினர் நலத்துறை சார்பில் இணைப்புச் சாலைப் பணிகள் ரூபாய்.294.21 கோடி மதிப்பிலும், தெரு விளக்குகள் ரூபாய்.3.79 கோடி மதிப்பிலும், சோலார் மின் விளக்குகள் ரூபாய்.16.99 கோடி மதிப்பிலும், குடிநீர் திட்டப் பணிகள் ரூபாய் 79.69 கோடி மதிப்பிலும் பணிகளை மேற்கொள்ள நிர்வாக அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

மேலும், கூடுதல் திட்டங்களுக்காக ரூபாய்.93.99 கோடி நிதி ஒதுக்கீடு கோரப்பட்டுள்ளது.முதலமைச்சர் ஆணையின்படி பழங்குடியின மக்கள் வாழ்வாதாரத்தை பெருக்கிட பல்வேறு பணிகள் வனத்துறை மேற்கொண்டு வருகிறது.

நீதிமன்ற வழிகாட்டுதழின்படி வனப்பகுதியில் உள்ள அந்நிய களைத் தாவரங்களை அகற்றும் பணி மூலம் பழங்குடியின மக்களுக்கு வேலை வாய்ப்புகள் வழங்கவும், பழங்குடியின மக்களுக்கான குடியிருப்பு வசதி, கல்வி, விவசாயம், தொழில் வசதிகளை மேம்படுத்தவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அந்நிய களைத் தாவரங்களை அகற்றும் பணி மூலம் பழங்குடியின மக்களுக்கு வேலை வாய்ப்புகள் வழங்க முதல்கட்டமாக 700 எக்டேர் பரப்பளவில் பணிகளை மேற்கொள்ள ரூபாய்.535.21 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக அலுவலர்கள் ஆய்வுக் கூட்டத்தில் அமைச்சர் கா.ராமசந்திரன் தெரிவித்தார்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

Similar News