உள்ளூர் செய்திகள்

ஆடி கிருத்திகை: பழனியில் திரளான பக்தர்கள் சாமி தரிசனம்

Published On 2024-07-29 08:20 GMT   |   Update On 2024-07-29 08:20 GMT
  • பக்தர்கள் அரோகரா கோஷம் முழங்க கோவிலுக்கு வந்தனர்.
  • ஆடிக்கிருத்திகை வழிபாடு சிறப்பாக நடைபெற்றது.

பழனி:

பழனியில் இன்று ஆடிக்கிருத்திகையை முன்னிட்டு அதிகாலை 4 மணிக்கு நடை திறக்கப்பட்டு விஸ்வரூபதரிசனம் நடந்தது. இதனையடுத்து காலசந்தி பூஜைகள் நடத்தப்பட்டன. அதிகாலையிலேயே ஏராளமான பக்தர்கள் பழனி மலைக்கோவிலுக்கு வரத் தொடங்கினர்.

இதனால் படிப்பாதை, யானைப்பாதைகளில் பக்தர்கள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. மேலும் ரோப்கார் நிலையம், மின் இழுவை ரெயில் நிலையங்களிலும் பக்தர்கள் அதிக அளவில் காணப்பட்டனர்.

ராஜ அலங்காரத்தில் எழுந்தருளிய முருகப்பெருமானை சுமார் 2 மணி நேரத்துக்கும் மேலாக நீண்ட வரிசையில் காத்திருந்து வழிபட்டனர். பக்தர்கள் பால்குடம் எடுத்து வந்தும், காவடி சுமந்து வந்தும் அரோகரா கோஷம் முழங்க கோவிலுக்கு வந்தனர்.

இதனால் பழனி கோவிலில் திரும்பிய திசையெல்லாம் பக்தர்கள் தலையாகவே காணப்பட்டது.

இதே போல் பல்வேறு முருகன் கோவில்களிலும் ஆடிக்கிருத்திகையை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது. திண்டுக்கல் ஒய்.எம்.ஆர்.பட்டி சுப்பிரமணிய சுவாமி கோவிலில் பக்தர்கள் அதிகாலையிலேயே நீண்ட வரிசையில் காத்திருந்து பாலாபிஷேகம் செய்து முருகனுக்கு உகந்த தேன், தினை மாவை படையலிட்டு வழிபட்டனர்.

இதே போல் ராமலிங்கம்பட்டி பாதாள செம்புமுருகன் கோவில், கந்தக்கோட்டம் முருகன் கோவில், அபிராமி அம்மன் கோவிலில் உள்ள முருகன் சன்னதி, திருமலைக்கேணி உள்ளிட்ட கோவில்களிலும் ஆடிக்கிருத்திகை வழிபாடு சிறப்பாக நடைபெற்றது.

Tags:    

Similar News