உள்ளூர் செய்திகள்

மின் கட்டண உயர்வை எதிர்த்து சென்னையில் 9 இடங்களில் அ.தி.மு.க. கண்டன ஆர்ப்பாட்டம்

Published On 2024-07-23 08:41 GMT   |   Update On 2024-07-23 08:41 GMT
  • தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டம் நடந்தது.
  • 9 இடங்களில் தி.மு.க. அரசை கண்டித்து போராட்டம் நடந்தது.

சென்னை:

மின்சார கட்டண உயர்வு மற்றும் ரேசன் கடைகளில் பருப்பு, பாமாயில் போன்றவற்றை நிறுத்த முயற்சிப்பதாக கூறி தி.மு.க. அரசை கண்டித்து அ.தி.மு.க. சார்பில் இன்று தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் கண்டன ஆர்ப்பட்டம் நடத்தப்படும் என்று அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்து இருந்தார்.

அதன்படி கட்சி மாவட்டங்கள் அடிப்படையில் இன்று காலையில் மாவட்ட செயலாளர்கள், முன்னாள் அமைச்சர்கள் தலைமையில் தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டம் நடந்தது. ஒருங்கிணைந்த சென்னை மாவட்டத்தில் 9 இடங்களில் தி.மு.க. அரசை கண்டித்து போராட்டம் நடந்தது.

வடக்கு மாவட்டம் வடசென்னை மாவட்டம் சார்பில் மாவட்ட செயலாளரும் முன்னாள் அமைச்சருமான டி.ஜெயக்குமார் தலைமையில் பழைய வண்ணாரப்பேட்டை கிருஷ்ணா தியேட்டர் அருகில் ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் மாவட்ட நிர்வாகிகள் தொண்டர்கள் கலந்து கொண்டனர்.

வடசென்னை தெற்கு (மேற்கு) மாவட்டத்தின் சார்பில் அமைப்பு செயலாளரும், மாவட்ட செயலாளரு

மான ந.பாலகங்கா தலைமையில் தங்க சாலை மணிக்கூண்டு அருகில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

தண்டையார்பேட்டை வைத்தியநாதன் பாலம் அருகில் வடசென்னை மாவட்ட செயலாளர் ஆர்.எஸ்.ராஜேஷ் தலைமையில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் தொண்டர்கள் கலந்து கொண்டு கண்டன கோஷங்களை எழுப்பினார்கள்.

தென்சென்னை மாவட்ட செயலாளர் ஆதிராஜாராம் தலைமையில் அண்ணாசாலை தாராபூர் டவர் அருகில் தி.மு.க. அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடந்தது.

தென்சென்னை (தெற்கு) மாவட்ட செயலாளர் எம்.கே.அசோக் தலைமையில் வேளச்சேரி காந்தி சிலை அருகில் மின் கட்டண உயர்வை குறைக்கக் கோரி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். சென்னை புறநகர் மாவட்ட செயலாளர் கே.பி.கந்தன் தலைமையில் பள்ளிக்கரணை மாநகராட்சி அலுவலகம் அருகில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

வடசென்னை வடக்கு (மேற்கு) மாவட்ட செயலாளர் டி.ஜி.வெங்கடேஷ்பாபு தலைமையில் கொளத்தூரில் அண்ணாசிலை அருகில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

தென்சென்னை தெற்கு (மேற்கு) மாவட்ட செயலாளர் வி.என்.ரவி தலைமையில் எம்.ஜி.ஆர்.நகரில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.

தென்சென்னை மாவட்ட செயலாளர் தி.நகர் சத்யா தலைமையில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் கண்டன கோஷங்களை எழுப்பினார்கள். இதேபோல காஞ்சீபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர், கோவை, மதுரை, சேலம், திருச்சி, நெல்லை, கன்னியாகுமரி, கடலூர், விழுப்புரம், திருவண்ணாமலை, வேலூர் உள்ளிட்ட அனைத்து மாவட்டங்களிலும் அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர்கள், மாவட்ட செயலாளர்கள் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆயிரக்கணக்கான தொண்டர்கள் திரளாக கலந்து கொண்டு அரசுக்கு எதிராக கோஷங்களை எழுப்பினார்கள்.

Tags:    

Similar News