உள்ளூர் செய்திகள்

நெல்லை, தூத்துக்குடி மாவட்டத்தில் 10 நாட்களுக்கு பிறகு கடலுக்கு சென்ற மீனவர்கள்

Published On 2024-05-28 05:49 GMT   |   Update On 2024-05-28 05:49 GMT
  • மழை நின்று விட்டதாலும், காற்றின் வேகம் குறைந்துள்ளதாலும் இன்று காலை முதல் மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர்.
  • தூத்துக்குடி மாவட்டத்திலும் 10 நாட்களுக்கு பிறகு இன்று மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்க சென்றனர்.

நெல்லை:

மன்னார் வளைகுடா மற்றும் கன்னியாகுமரி கடல் பகுதிகளில் காற்றின் வேகம் 40 முதல் 55 கிலோமீட்டர் வரை வீசக் கூடும் என்றும், கனமழை முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என கடந்த 17-ந்தேதி மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை சார்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டது.

இதனால் நெல்லை மாவட்டத்தில் உள்ள மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்க செல்ல வேண்டாம் எனவும் அறிவுறுத்தப்பட்டிருந்தது.

இதைத்தொடர்ந்து கடந்த 18-ந்தேதி முதல் நேற்று வரை 10 நாட்களாக நெல்லை மாவட்டத்தில் உள்ள கூட்டப்புளி, பெருமணல், இடிந்தகரை, உவரி, கூத்தன்குழி, பஞ்சல், தோமை யர்புரம் உள்ளிட்ட 10 மீனவ கிராமங்களில் உள்ள சுமார் 10 ஆயிரம் நாட்டுப்படகு மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்க செல்லாமல் இருந்து வந்தனர்.

இந்த நிலையில் மாவட்டத்தில் மழை நின்று விட்டதாலும், காற்றின் வேகம் குறைந்துள்ளதாலும் இன்று காலை முதல் மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர்.

இதனால் கரையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 1,500 நாட்டு படகுகள் மூலம் மீன வர்கள் கடலுக்கு மீன் பிடிக்க புறப்பட்டு சென்றுள்ளனர். கிழக்கு கடற்கரை முழுமையும் காற்றின் வேகத்தால் மீன் பிடிக்க செல்ல தடை விதிக்கப்பட்டு இருந்ததால் மீன்களின் விலை அதிகரித்து காணப்பட்டது.

இதனால் கேரளாவில் இருந்து தான் மீன் இறக்குமதி செய்யப்பட்டது. இந்நிலையில் இன்று முதல் மீன் பிடிக்க மீனவர்கள் சென்றுள்ளதால் இனி விலை குறையும் என வியாபாரிகள் தெரிவித்தனர்.

தூத்துக்குடி மாவட்டத்திலும் 10 நாட்களுக்கு பிறகு இன்று மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்க சென்றனர்.

தூத்துக்குடி, வேம்பார், பெரியதாழை ஆகிய பகுதிகளை சேர்ந்த 3,600 நாட்டுப் படகுகளில் 20 ஆயிரம் மீனவர்கள், 10 ஆயிரம் தொழிலாளர்கள் அதிக மீன்கள் கிடைக்கும் என்ற மகிழ்ச்சியுடன் கடலுக்கு புறப்பட்டு சென்றனர்.

Tags:    

Similar News