ஈரோட்டில் 102 டிகிரி வெயில் கொளுத்தியதால் பொதுமக்கள் கடும் அவதி
- வெயில் தாக்கம் மேலும் அதிகரிக்க கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
- வாகன ஓட்டிகள் மீண்டும் அவதி அடைந்து வருகின்றனர்.
ஈரோடு:
ஈரோடு மாவட்டத்தில் கடந்த மார்ச், ஏப்ரல் மாதத்தில் வெயிலின் தாக்கம் அதிக அளவில் பதிவானது. அதிகபட்சமாக 110 டிகிரி வரை வெயில் கொளுத்தியதால் மக்கள் கடும் அவதி அடைந்தனர். அனல் காற்றுடன் வெயில் கொளுத்தியதால் வாகன ஓட்டிகள் அவதி அடைந்தனர்.
வேர்வை, புழுக்கத்தால் குழந்தைகள், முதியவர்கள் சிரமப்பட்டனர். வெயிலின் தாக்கத்திலிருந்து தப்பிக்க மோர், இளநீர், கரும்பு பால் போன்றவற்றை மக்கள் விரும்பி பருகினர். இந்நிலையில் கடந்த மே மாதம் 4-ந் தேதி அக்னி நட்சத்திர வெயில் கொழுத்த தொடங்கியது. இதனால் மேலும் வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும் என்று மக்கள் அஞ்சி இருந்த நிலையில் திடீரென பரவலாக மழை பெய்து தொடங்கியது.
கிட்டத்தட்ட இரண்டு வாரமாக ஈரோடு புறநகர் மாவட்டத்தில் மழை பெய்தது. இதனால் வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழ்நிலை எழுதியது. வெயிலின் தாக்கம் குறைந்ததால் மக்கள் நிம்மதி பெருமூச்சு விட்டனர். இந்நிலையில் கடந்த இரண்டு நாட்களாக ஈரோடு மாவட்டத்தில் மீண்டும் வெயிலின் தாக்கம் அதிகளவில் இருந்து வருகிறது. வழக்கம் போல் காலை 8 மணி அளவில் வெயிலின் தாக்கம் தொடங்கி விடுகிறது. நண்பகல் 12 மணி முதல் 4 மணி வரை வெயிலின் தாக்கம் உச்சத்தில் உள்ளது.
இதனால் வாகன ஓட்டிகள் மீண்டும் அவதி அடைந்து வருகின்றனர். கிட்டத்தட்ட 20 நாட்களுக்குப் பிறகு நேற்று ஈரோடு மாவட்டத்தில் 102 டிகிரி வெயில் கொளுத்தியது. வீடுகளில் மீண்டும் புழுக்கம் நிலவுகிறது. சாலைகளில் அனல் காற்றுடன் வெயில் கொளுத்துவதால் வாகன ஓட்டிகள் அவதி அடைந்து வருகின்றனர்.
இந்நிலையில் தமிழகத்தில் மேலும் 3 நாட்களுக்கு வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால் வெயில் தாக்கம் மேலும் அதிகரிக்க கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.