4 நாட்களுக்கு பிறகு குற்றாலம் அருவிகளில் குளிக்க அனுமதி
- பாதுகாப்பு கருதி குளிப்பதற்கு தடை விதிக்கப்பட்டிருந்தது.
- அருவிகளில் தண்ணீரின் சீற்றமும் குறைந்தது.
தென்காசி:
தென்காசி மாவட்டத்தின் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் பெய்து வரும் தொடர் மழையின் காரணமாக முக்கிய சுற்றுலா தலமாக விளங்கிவரும் குற்றாலம் அருவிகளில் கடந்த 4 நாட்களாக தண்ணீர் அதிகரித்து வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.
இதனால் மெயின் அருவி, ஐந்தருவி, பழைய குற்றாலம், சிற்றருவி, புலியருவி உள்ளிட்ட அனைத்து அருவிகளிலும் சுற்றுலா பயணிகள் பாதுகாப்பு கருதி குளிப்பதற்கு தடை விதிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் நேற்று பிற்பகலில் இருந்தே மலைப்பகுதியில் மழையின் தாக்கம் குறையத்தொடங்கியது. இதனால் குற்றால அருவிகளில் தண்ணீரின் சீற்றமும் குறைந்தது.
இதனை தொடர்ந்து நேற்று இரவு முதல் சுற்றுலா பயணிகள் குளிப்பதற்காக ஐந்தருவியில் அனுமதி வழங்கப்பட்டது. தொடர்ந்து இன்று காலையில் பழைய குற்றாலத்திலும், அதன்பின்னர் சிறிது நேரத்தில் மெயினருவி என படிப்படியாக அனைத்து அருவிகளிலும் குளிக்க சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டது.
4 நாட்கள் தடைக்கு பின்னர் கிடைத்த அனுமதியால் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி அடைந்தனர். ஐந்தருவி, மெயின் அருவி, பழைய குற்றாலம் அருவிகளில் குவிந்த சுற்றுலா பயணிகள் ஆர்வமுடன் குளித்து மகிழ்ந்தனர்.