69 ஆண்டுகளுக்கு பிறகு ராமேசுவரத்தில் அதிகபட்சமாக 44 செ.மீ. மழை பதிவு
- மேக வெடிப்பு ஏற்பட்டு அதிகன மழை கொட்டுகிறது.
- மழைநீர் குளம்போல் தேங்கி பொதுமக்கள் அவதி.
ராமநாதபுரம்:
வளிமண்டல சுழற்சியின் காரணமாக தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. அதன் அடிப்படையில் ராமநாதபுரம் மாவட்டம் முழுவதும் நேற்று முன்தினம் இரவு தொடங்கி இன்று காலை வரை விட்டுவிட்டு கனமழை வெளுத்து வாங்கியது.
இதன் காரணமாக ராமநாதபுரம் நகர் மற்றும் சுற்று வட்டாரப் பகுதியில் இருக்கக் கூடிய தாழ்வான இடங்களில் மழைநீர் குளம்போல் தேங்கி பொதுமக்கள் மிகுந்த அவதி அடைந்தனர்.
குறிப்பாக ராமநாதபுரம் பேருந்து நிலையம், அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை, தங்கப்பா நகர், இளங்கோவடிகள் தெரு, சூரங்கோட்டை, அரண்மனை, வண்டிக்கார தெரு உள்ளிட்ட பகுதிகளில் முழங்கால் அளவுக்கு தண்ணீர் தேங்கியதால் அன்றாட பணிகளுக்கு செல்லக்கூடிய பொதுமக்கள், பாதசாரிகள், வாகன ஓட்டிகள் சிரமப்பட்டனர்.
தங்கப்பா நகர் பகுதியில் புதிதாக கட்டி திறக்கப்பட்ட சிறுவர் பூங்கா ஒன்று மழை நீரால் முழுவதுமாக மூழ்கியது. அதேபோல் அய்யர் மடம் பகுதியில் உள்ள ஊரணியும், சாலையும் ஒன்றாக சேர்ந்து காணப்படுவதால் அந்த பகுதியில் செல்லக்கூடிய மக்கள் அச்சத்துடனேயே கடக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
ராமநாதபுரம் மாவட்டத்தில் ராமேசுவரம், மண்டபம், பாம்பன், தங்கச்சிமடம் மற்றும் ராமநாதபுரம் ஆகிய நான்கு பகுதிகளில் வரலாறு காணாத மழையால் இந்த இரண்டு நாட்களில் மக்கள் இயல்பு வாழ்க்கை முற்றிலும் முடங்கியுள்ளது.
அதிலும் கடந்த 69 ஆண்டுகளுக்கு பிறகு அதாவது 1955-ம் ஆண்டுக்கு பிறகு ராமநாதபுரம் மாவடட்த்தில் குறிப்பாக ராமேசுவரத்தில் 30 செ.மீட்டருக்கும் அதிகமாக மழை பதிவாகி உள்ளது.
ராமேசுவரம் ராமநாத சுவாமி-பர்வதவர்த்தி அம்பாள் கோவில், உலக பிரசித்தி பெற்ற 3-ம் பிரகாரம், உத்தரகோச மங்கை மங்களநாதர் கோவில்களுக்குள் மழை வெள்ளம் புகுந்தது. இதனால் பக்தர்கள் கோவில்களுக்குள் செல்ல முடியாமல் தவித்தனர். அதிகாரிகள் உடனடியாக அங்கு சென்று பணியாளர்கள் மூலம் மழைநீரை அப்புறப்படுத்தினர்.
அதேபோல் பாம்பன் ரோடு பாலத்தில் எதிரே வரும் வாகனங்கள் கூட தெரியாத அளவுக்கு மழை பெய்தது. இதனால் சுமார் 1 மணி நேரத்திற்கும் மேலாக அந்த பாலத்தில் போக்கு வரத்து நிறுத்தப்பட்டது. இன்று காலையும் தொடர்ந்து அந்த பகுதியில் மழை பெய்து வருகிறது.
இது குறித்து பொதுமக்கள் கூறுகையில், இப்படி ஒரு மழையை நாங்கள் வாழ்நாளில் பார்த்தது கிடையாது. பல ஆண்டுகளுக்கு பிறகு இந்த மழையானது பெய்துள்ளதாகவும் முறையான வாறுகால்கள் இல்லாததாலேயே இதுபோன்று மழை நீர் தேங்கி நிற்பதாகவும் குற்றம் சாட்டினர்.
குறிப்பாக பல ஊரணிகள் தண்ணீர் வரத்தின்றி வறண்டு காணப்படும் நிலையில் ஒரு சில ஊரணிகள் மட்டும் நிரம்பி வழிகிறது. மாவட்ட நிர்வாகம் உடனடியாக வாறுகால்களை தூர்வாரி அந்தந்த குளங்கள் மற்றும் கண்மாய்களுக்கு செல்லக் கூடிய பகுதிகளை கண்டறிந்து சரி செய்ய வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளனர்.
இன்று காலையும் தொடர்ந்து மழை பெய்து வருவதால் ராமநாதபுரம் மாவட்டத்தில் சூழ்நிலைக்கு ஏற்ப பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கலாம் என்று கலெக்டர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் தெரிவித்துள்ளார்.
ராமநாதபுரம் மாவட்டத்தில் நேற்று காலை 6 மணி முதல் இன்று காலை 6 மணி வரை பெய்த மழையளவு விபரம் மில்லி மீட்டரில் வருமாறு:-
ராமநாதபுரம்-125.60, மண்டபம்-271.20, ராமேசு வரம்-438, பாம்பன்-280, தங்கச்சிமடம்-338.40, பள்ளமோர்க்குளம்-50.70, திருவாடானை-12.80, தொண்டி-7.80, வட்டா ணம்-12.80, தீர்த்தண்ட தானம்-20.20, ஆர்.எஸ்.மங்கலம்-14.90, பரமக்குடி -25.60, முதுகுளத்தூர்-49, கமுதி-49, கடலாடி-73.20, வாலிநோக்கம்-65.60. மாவட்டம் முழுவதும் மொத்தம் 1,834.80 மில்லி மீட்டர் மழை பதிவாகி உள்ளது. இதன் சராசரி 114.68 மில்லி மீட்டர் ஆகும்.
மேக வெடிப்பு என்பது ஒரு குறுகிய காலத்தில் ஒரு பெரிய அளவிலான மழைப் பொழிவை குறிக்கிறது. இந்த மேக வெடிப்புகள் மிகவும் அரிதாகவே நிகழ்கிறது.
குறைந்த பரப்பளவில் அதாவது 20 முதல் 30 சதுர கிலோ மீட்டர் வரையிலான இடத்தில் ஒரு மணி நேரத் தில் 10 செ.மீ.க்கு மேல் மழை பதிவானால் அதுவே மேக வெடிப்பு எனப்படுகிறது. சில சமயங்களில் அது ஆலங்கட்டி மழையாகவும், இடியுடன் சேர்ந்த மழையாகவும் கொட்டுகிறது.
நிலத்தில் இருந்து உறிஞ்சப்படும் நீரானது, மேல்நோக்கி செல்லும்போது வெப்பக் காற்றின் அழுத்தம் காரணமாக குறிப்பிட்ட அந்த பகுதியில் மேக வெடிப்பு ஏற்பட்டு அதிகன மழை கொட்டுகிறது.