வேளாண் உற்பத்தி பொருட்கள் விற்பனை வளாகம் : பொதுமக்கள் - வியாபாரிகள் பயன்படுத்தி கொள்ள அழைப்பு
- முதல் கட்டமாக 35 கடைகள் அமைக்கப்பட்டுள்ளன.
- அதிகாலை4 மணி முதல்7 மணி வரை உற்பத்தியாளர்கள் தங்கள் வேளாண் உற்பத்தி பொருட்களை விற்பனை செய்யும் கடைகள் செயல்படுகின்றன.
திருப்பூர் :
திருப்பூர் வேளாண் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கம் சார்பில், வேளாண் உற்பத்தி பொருட்கள் விற்பனை வளாகம் துவங்கப்பட்டுள்ளது.வியாபாரிகள், பொதுமக்கள் இதைப் பயன்படுத்திக் கொள்ள அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.இச்சங்கம் சார்பில் திருப்பூர் புஷ்பா சந்திப்பில் உள்ள சங்க வளாகத்தில் விவசாய குழுக்கள், வேளாண் பொருள் உற்பத்தியாளர்கள் தங்கள் உற்பத்தி பொருட்களை நேரடியாக விற்பனை செய்யும் வகையில் கூட்டுறவு சந்தை என்ற பெயரில் கடைகள் அமைக்கப்பட்டுள்ளன.
இதில் முதல் கட்டமாக 35 கடைகள் அமைக்கப்பட்டுள்ளன. இதில் அதிகாலை4 மணி முதல்7 மணி வரை உற்பத்தியாளர்கள் தங்கள் வேளாண் உற்பத்தி பொருட்களை விற்பனை செய்யும் வகையில் கடைகள் செயல்படுகின்றன.அதன் பின்னர் விற்பனைக்கு வைத்துள்ள பொருட்களை சங்க பிரதிநிதிகள் காலை 9 மணி வரை விற்பனை செய்வர். அதன் தொகை, உற்பத்தியாளர் வங்கி கணக்கில் சேர்க்கப்படும்.
இதில் காய்கறி வகைகள், செக்கு எண்ணெய் வகைகள், நாட்டு சர்க்கரை, வெல்லம், சிறு தானியங்கள் உள்ளிட்ட பல்வேறு வேளாண் உற்பத்தி பொருட்கள் விற்பனை செய்யப்படுகிறது.இந்த கூட்டுறவு சந்தை முறையை விவசாயிகள், வியாபாரிகள், பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ள கூட்டுறவு துறை அழைப்பு விடுத்துள்ளது.