உள்ளூர் செய்திகள்

புத்தாண்டை முன்னிட்டு டெல்டா மாவட்டங்களில் போலீசார் தீவிர பாதுகாப்பு

Published On 2022-12-31 10:06 GMT   |   Update On 2022-12-31 10:06 GMT
  • சந்தேக நபர்கள் நடமாட்டம் இருந்தால் உடனடியாக தகவல் தெரிவிக்கும்படி பொதுமக்களுக்கு வேண்டுகோள்.
  • திருட்டு சம்பவங்களை தடுக்க போலீசார் மப்டியில் நின்று கண்காணிப்பு.

தஞ்சாவூர்:

தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு கடந்த ஒரு வாரத்துக்கு முன்பே போலீசார் தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். 4 மாவட்டங்களிலும் சேர்த்து 3000-க்கும் மேற்பட்ட போலீசார் தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

தஞ்சை பெரிய கோவில், மணிமண்டபம் பூங்கா, வேளாங்கண்ணி தேவாலயம், மயிலாடுதுறை அமிர்தகடேஸ்வரர் கோவில், திருவாரூர் தியாகராஜர் கோவில் உள்ளிட்ட பல்வேறு முக்கிய கோவில்கள், சுற்றுலா தளங்களில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இது தவிர அங்கு சந்தேகப்படும்படி யாராவது நடமாடுகிறார்களா எனவும் கண்காணித்து வருகின்றனர். மேலும் சந்தேக நபர்கள் நடமாட்டம் இருந்தால் உடனடியாக தகவல் தெரிவிக்கும்படி பொதுமக்களை கேட்டுக் கொண்டுள்ளனர்.

குறிப்பாக ஹோட்டல்களில் பாதுகாப்பை உஷா ர்படுத்தி உள்ளனர். மேலும் குடித்துவிட்டு வாகனம் யாராவது ஓட்டுகிறார்களா எனவும் வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். நான்கு மாவட்ட எல்லைப் பகுதிகளிலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

பஸ், ரெயில் நிலையங்கள், கடைவீதிகள் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் கூட்ட நெரிசலை பயன்படுத்தி நடைபெறும் திருட்டு சம்பவங்களை தடுக்க போலீசார் மப்டியில் நின்று கண்காணித்து வருகின்றனர். நாளை வரை இந்த பாதுகாப்பு தொடரும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

Tags:    

Similar News