உள்ளூர் செய்திகள்

மெரினாவில் விமானப்படையின் பிரமாண்ட ஒத்திகை: ரசித்து பார்த்த பொதுமக்கள்

Published On 2024-10-04 07:53 GMT   |   Update On 2024-10-04 07:53 GMT
  • மெரினா கடற்கரையில் லட்சக்கணக்கானோர் திரள்வார்கள் என்று எதிர்பார்ப்பு.
  • பலத்த பாதுகாப்புக்கு போலீசார் ஏற்பாடு.

சென்னை:

இந்திய விமானப் படையின் 92-ம் ஆண்டு கொண்டாட்டத்தை யொட்டி சென்னை மெரினா கடற்கரையில் வருகிற 6-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) விமான சாகச நிகழ்ச்சி நடைபெறுகிறது.

அன்று காலை 11 மணிக்கு தொடங்கி நடைபெறும் இந்த சாகச நிகழ்ச்சியை கண்டுகளிப்பதற்காக மெரினா கடற்கரையில் லட்சக்கணக்கானோர் திரள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

காணும் பொங்கல் தினத்தில் மேற்கொள்வது போன்று மெரினா கடற்கரை பகுதி முழுவதும் போலீசார் தீவிரமாக கண்காணிக்க உள்ளனர்.

விமான சாகச நிகழ்ச்சியை கண்டு ரசிக்க வருபவர்கள் கடலில் இறங்கி குளிக்க வருகிற 6-ந்தேதி தடை விதிக்கப்பட உள்ளது.

ஞாயிற்றுக்கிழமை விடுமுறை தினம், காலையில் இருந்தே மக்கள் மெரினாவில் கூடுவார்கள் என்பதால் அவர்களை ஒழுங்குபடுத்தவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.


விமான சாகச நிகழ்ச்சியையொட்டி 3 நாட்கள் ஒத்திகை நிகழ்ச்சிக்கும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதன்படி நேற்று முன்தினமும், நேற்றும் 2 நாட்கள் ஒத்திகை நடத்தப்பட்டது. இதனை பொது மக்கள் கண்டு ரசித்தனர்.

இந்த நிலையில் இன்று 72 விமானங்கள் பங்கேற்கும் பிரமாண்ட ஒத்திகை நடைபெற்றது. 6-ந் தேதி விமான சாகச நிகழ்ச்சி நடைபெறும்போது பங்கேற்ற்கும் அத்தனை விமானப் படை விமானங்களும் ஒத்திகையில் பங்கேற்கின்றன.

இந்த ஒத்திகை 3 மணிநேரம் 7 பிரிவுகளாக நடைபெற்றது. இந்த ஒத்திகையின் போது விமானப்படை வீரர்கள் மெய்சிலிர்க்கும் வகையிலும் மயிர்கூச்செரியும் வகையிலும் சாகச நிகழ்ச்சியை செய்து காட்டினர்.


இந்த ஒத்திகை நிகழ்ச்சியினை பொதுமக்கள் வெயிலையும் பொருட்படுத்தாமல் குடையை பிடித்துக்கொண்டு நின்று கண்டுகளித்தனர்.

Tags:    

Similar News