மாநில அளவிலான வலு தூக்கும் போட்டியில் ஆலங்குளம் மாணவனுக்கு தங்கப்பதக்கம்
- போட்டியில் 500-க்கும் மேற்பட்ட இளைஞர்கள் கலந்து கொண்டனர்.
- 74 கிலோ எடை பிரிவில் சுதர்சன் தங்கப்பதக்கம் வென்றார்.
ஆலங்குளம்:
தமிழ்நாடு பவர் லிப்டிங் கழகம் மற்றும் தனியார் நிறுவனம் இணைந்து நடத்திய மாநில அளவிலான வலு தூக்கும் போட்டி கோவையில் நடந்தது. இதில் தமிழ்நாடு முழுவதும் இருந்து 500-க்கும் மேற்பட்ட இளைஞர்கள் கலந்து கொண்டனர். இதில் ஆலங்குளத்தை சேர்ந்த முருகன் என்பவரின் மகன் சுதர்சன் என்ற கல்லூரி மாணவன் 74 கிலோ எடை பிரிவில் கலந்து கொண்டு 125 கிலோ தூக்கி முதலிடம் பிடித்து தங்கப்பதக்கம் வென்றார். எளிமையான குடும்பத்தை சேர்ந்த இந்த மாணவன் ஆலங்குளம் அருகே உள்ள நல்லூர் சி.எஸ்.ஐ. ஜெயராஜ் அன்னபாக்கியம் கல்லூரியில் பி.பி.ஏ. பட்டப்படிப்பு முடித்துள்ளார்.
மேலும் தற்போது ஆலங்குளம் தினசரி காய்கனி சந்தை மார்க்கெட்டில் இரவு நேரத்தில் வேலை பார்த்து கொண்டு வீரவநல்லூர் தனியார் கல்லூரியில் உடற்கல்வி ஆசிரியர் படிப்பு படித்து வருகிறார். இவர் கொரோனா காலகட்டத்தில் இருந்து கடந்த 2 ஆண்டு காலமாக தினசரி காய்கனி சந்தையில் வேலை செய்து கொண்டு பயிற்சி பெற்று குறுகிய காலகட்டத்தில் மாநில அளவில் முதலிடம் பிடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இவரை ஆலங்குளம் காய்கனி சந்தை மார்க்கெட் உரிமையாளர்கள் சங்கம் மற்றும் ஊர் பொதுமக்கள் பாராட்டினர்.