பென்னாகரம் பகுதியில் சந்துக்கடைகளில் மதுவிற்பனை படுஜோர்
- கள்ளத்தனமாக சந்து கடைகளில் மதுவிற்பனையை முற்றிலும் தடுக்க வேண்டும்.
- தின கூலி வேலை செய்து வருபவர்கள் மிகுந்த மன வருத்தத்திற்கு ஆளாகின்றனர்.
ஒகேனக்கல்,
தருமபுரி மாவட்டத்தில் உள்ள அரசு மதுபான கடைகளில் மதுபான பாட்டில்களின் விலையை விட கூடுதலாக விற்பனை செய்கின்றனர். குறிப்பாக பென்னாகரம் சுற்று வட்டாரத்தில் ஜக்கம்பட்டி பகுதியில் மட்டும் ஒரே ஒரு மதுபானம் கடை இயங்கி வருகிறது.
இந்த கடையில் பணிபுரியும் ஊழியர்கள் மதுபானம் வாங்க வரும் குடிமகன்களிடம் குவாட்டருக்கு 5 ரூபாய், ஆப் குவாட்டருக்கு 10 ரூபாயும், ஃபுல் பாட்டிலுக்கு 20 ரூபாயும், பீர்ருக்கு 10 ரூபாய் என அதிகமாக வசூல் செய்கின்றனர்.
இதனால் தின கூலி வேலை செய்து வருபவர்கள் மிகுந்த மன வருத்தத்திற்கு ஆளாகின்றனர். அரசு நிர்ணயித்த விலையை விட கூடுதலாக வசூல் செய்வதை கேள்வி கேட்டால் டாஸ்மாக் ஊழியர்களுக்கும் வாடிக்கையாளருக்கும் வாக்குவாதம் ஏற்படுகின்றன. அப்படி வாக்குவாதம் ஏற்படும் போது தேவையற்ற வார்த்தைகளால் வஞ்சிக்கப்படுவதோடு மட்டுமல்லாமல் பல்வேறு பிரச்சனைகள் ஏற்படுகின்றன.
பென்னாகரம் அருகே உள்ள ஜக்கம்பட்டி டாஸ்மார்க் கடை ஊழியர்கள் கள்ளத்தனமாக சந்து கடை நடத்துபவர்களுக்கு மொத்தமாக மது பாட்டில்களை மொத்தமாக பெட்டி பெட்டியாக கொடுக்கிறார்கள்.
டாஸ்மார்க் ஊழியர்களுக்கு ஒரு பாட்டில் மேல் 15 முதல் 20 ரூபாய் வரை கமிஷனாக கொடுத்து விட்டு டாஸ்மாக் கடைகளில் இருந்து கள்ளத்தனமாக மது பாட்டில்கள் எடுத்துச் செல்லும் சந்து கடை வியாபாரிகள் சந்து கடைகளில் அதிக லாபத்தை வைத்து விற்பனை செய்கின்றனர்.
இதில் 140 ரூபாய் கோட்டர் 200 ரூபாய் என்றும், 200 ரூபாய் குவாட்டர் 300 ரூபாய் என்றும், அதற்கு மேல் விலை அதிகமாக உள்ள மதுபானங்கள் ஒரு குவாட்டர் 400 முதல் 500, 600 ரூபாய் வரை அதிக லாபம் வைத்து சந்து கடைகளில் விற்கப்படுகிறது.
இதனால் கள்ளத்தனமாக சந்து கடைகளில் மதுவிற்பனையை முற்றிலும் தடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.