உடன்குடி பகுதியில் திரும்பிய திசை எல்லாம் தசரா பக்தர்கள் அம்மன் பெயரில் காணிக்கை வசூல்
- காப்பு கட்டிய பின்னர், தங்களுக்கு பிடித்தமான வேடங்களை அணிந்து ஊர், ஊராக சென்று அம்மன் பெயரில் காணிக்கை வசூல் செய்து வருகின்றனர்.
- சிறுவர்களுக்கு பிடித்த குரங்கு, கரடி, காளி மற்றும் சுவாமி வேடங்கள் உட்பட விதவிதமான வேடங்கள் அணிந்து காணிக்கை வசூல் செய்து வருகின்றனர்.
உடன்குடி:
குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் திருக்கோவில் தசரா பக்தர்கள் முதலில் கடலில் நீராடி மாலை அணிந்து விரதம் தொடங்கி வந்தனர்.
தசரா திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கிய பின், கோவிலில் இலவசமாக வழங்கப்படும் மஞ்சள் கயிற்றினால் ஆன காப்பு என்பதை தங்களது வலது கையில் கட்டிக் கொண்டு, தங்களுக்கு பிடித்தமான வேடங்களை அணிந்து ஊர், ஊராக சென்று அம்மன் பெயரில் காணிக்கை வசூல் செய்து வருகின்றனர்.
உடன்குடி, பரமன்குறிச்சி, சீர்காட்சி, தாண்டவன் காடு, கொட்டங்காடு, செட்டியாபத்து, தண்டபத்து மற்றும் குலசேகரன் பட்டினம் சுற்றுவட்டார பகுதியில் திரும்பிய திசைகள் எல்லாம் தசரா பக்தர்கள் வீதி,வீதியாக சென்று காணிக்கை வசூல் செய்யும் கண்கொள்ளாக் காட்சியாக உள்ளது.
சிறுவர்களுக்கு பிடித்த குரங்கு, கரடி, காளி மற்றும் சுவாமி வேடங்கள் உட்பட விதவிதமான வேடங்கள் அணிந்து காணிக்கை வசூல் செய்து வருகின்றனர். இவர்கள் அனைவரும் தாங்கள் வசூல் செய்த காணிக்கைகளை 10-ம் திருநாளான வருகின்ற 24-ந் தேதி கோவில் கொண்டு சேர்ப்பார்கள். அன்று இரவு குலசேகரன் பட்டினம் கடற்கரையில் லட்சக்கணக்கான பக்தர்கள் மத்தியில் சூரசம்ஹார காட்சி நடைபெறும். மறுநாள் முதலில் அம்மனுக்கு காப்பு அவிழ்க்கப்படும். தொடர்ந்து வேடம் அணிந்த பக்தர்கள் காப்பு அவிழ்த்து விரதத்தை முடித்து கொள்வார்கள்.