உள்ளூர் செய்திகள்

கோப்புபடம்

தொடர் மழையால் அமராவதி அணை நீர்மட்டம் உயர்வு - விவசாயிகள் மகிழ்ச்சி

Published On 2023-11-16 05:16 GMT   |   Update On 2023-11-16 05:16 GMT
  • குடிநீர் தேவைக்காகவும் இந்த அணையில் இருந்து தண்ணீர் திறந்து விடப்படுகிறது
  • பாசன விவசாயிகள் மகிழ்ச்சியுடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்

திருப்பூர் : 

திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே அமைந்துள்ளது அமராவதி அணை. மொத்தம் 90 அடி உயரம் கொண்டது. இந்த அணையில் இருந்து திருப்பூர் , கரூர் மாவட்டங்களை சேர்ந்த 55 ஏக்கர் விளை நிலங்கள் பாசன வசதி பெற்று வருகின்றன. மேலும் குடிநீர் தேவைக்காகவும் இந்த அணையில் இருந்து தண்ணீர் திறந்து விடப்படுகிறது.

கடந்த ஒரு வாரத்துக்கு மேலாக அணை நீர் பிடிப்பு பகுதிகளில் நல்ல மழை பெய்து வருவதால் அணைக்கு நீர்வரத்து கணிசமாக உயர்ந்தது. ஜூன், ஜூலை மாதங்களில் பெய்ய வேண்டிய தென்மேற்கு பருவமழை போதிய அளவு பெய்யவில்லை. இதன் காரணமாக அணை நீர்மட்டம் 60 அடியாக உயர்ந்தது. அக்டோபர், நவம்பர் மாதம் துவங்கும் வடகிழக்கு பருவ மழை நன்றாக பெய்ததால் அணை முழு கொள்ளளவை அடைந்து பாசன வசதிக்கு தேவையான தண்ணீர் கிடைக்கும் என விவசாயிகள் நம்பி இருந்தனர்.

அக்டோபர் மாதம் ஓரளவு மழை பெய்த போதும் நவம்பர் மாதம் துவக்கத்தில் இருந்து மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் சாரலுடன் கூடிய மழை அவ்வப்போது பெய்து வந்தது. இதே போல கொடைக்கானல் பகுதியிலும், கேரளப்பகுதிகளிலும், சின்னாறு ,பாம்பாறு, கூட்டாறு ஆகிய நீர் பிடிப்பு பகுதிகளிலும் நீடிக்க துவங்கியதால் அணை நீர்மட்டம் கணிசமாக உயரத்துவங்கியது.

கடந்த 10-ந்தேதி அணையின் நீர்மட்டம் 69.85 அடியாக இருந்தது. அணைக்கு நீர்வரத்து 1400 கன அடியாக அதிகரித்து இருந்ததை தொடர்ந்து அணை நீர்மட்டம் உயர துவங்கியது. தொடர் மழை காரணமாக 11-ந் தேதி அணை நீர்மட்டம் 71 .23 அடியாகவும், 12ந் தேதி அணை நீர்மட்டம் 72.88 அடியாகவும், 13ந் தேதி 73. 33 அடியாகவும், 14-ந் தேதி 74 .12 அடியாகவும் உயர்ந்தது.

இன்னும் ஒரு வாரத்திற்கு தமிழகத்தில் மழை நீடிக்கும் என வானிலை மையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளதால் அணை வேகமாக தனது முழு கொள்ளளவை அடைந்து நிரம்பி வழியும் என பாசன விவசாயிகள் மகிழ்ச்சியுடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். உடுமலை , மடத்துக்குளம் உள்ளிட்ட பகுதிகளில் அவ்வப்போது சாரலுடன் மழை நீடிப்பதால் தென்னை, மக்காச்சோளம் ,கரும்பு, நெல் பயிரிட்டுள்ள விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Tags:    

Similar News