அக்னிபாத் திட்டத்தை வரவேற்கும் இளைஞர்கள்- மத்திய இணை மந்திரி பேச்சு
- வ.உ.சி.யின் தற்சார்பு கனவை பிரதமர் மோடி நிறைவேற்றி வருகிறார்.
- அப்துல் கலாம் கண்ட கனவுபடி, இந்தியா உலகிற்கே வழிகாட்டியாக திகழும்.
'ஓலம்' சூழ்ச்சி, வீழ்ச்சி, எழுச்சி என்கிற தலைப்பிலான காணொளி வெளியீட்டு விழா சென்னை அரும்பாக்கம் டி.ஜி. வைஸ்ணவா கல்லூரியில் நேற்று நடைபெற்றது.இதில் கலந்து கொண்ட மத்திய செய்தி மற்றும் தகவல் ஒலிபரப்புத்துறை இணை மந்திரி எல்.முருகன் பேசியதாவது:
உலகின் தலை சிறந்த நாடாக இந்தியா உள்ளது. குறிப்பாக கடந்த 8 ஆண்டுகளில் இந்த நாடு அடைந்துள்ள வளர்ச்சியை அனைவரும் கண்கூடாக காண முடியும். ஆங்கிலேயர்களுக்கு எதிராக உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட சுதேசி கப்பலை இயக்கிவர் வ.உ. சிதம்பரனார்.
அவரது தற்சார்பு கனவை இன்று பிரதமர் நரேந்திர மோடி நிறைவேற்றி கொண்டு இருக்கிறார். நாடு 75 வது சுதந்திர தினத்தை கொண்டாடும் நேரத்தில், வ உ சி யின் 150 ஆவது பிறந்த தினம் வருவது மேலும் சிறப்பு வாய்ந்தது. பிரதமர் விடுத்த அழைப்பின்படி, வரும் 13 முதல் 15 ஆம் தேதி வரை அனைத்து வீடுகளிலும் தேசியக்கொடியை ஏற்ற வேண்டும்.
இது ஆங்கிலேயர்கள் தாக்குதலின்போது தேசிய கொடியை கீழே விழாமல் காத்த திருப்பூர் குமரனுக்கு செலுத்தும் மிகச் சிறந்த காணிக்கையாக இருக்கும். இளைஞர் மத்தியில் அக்னிபத் திட்டம் வரவேற்பை பெற்றுள்ளது, லட்சக்கணக்கான இளைஞர்கள் தாமாகவே முன்வந்து அக்னிபத் திட்டத்திற்கு பதிவு செய்து வருகின்றனர்.
அப்துல் கலாம் கண்ட கனவுபடி, இந்தியா உலகிற்கே வழிகாட்டியாக திகழும். ஆங்கிலேயர்களின் ஆக்கிரமிப்புக்கு முன்பு எப்படி இந்தியர்கள் உலகுக்கே வழிகாட்டியாகவும், முன்னோடியாகவும் இருந்தார்களோ, அதேபோல நாட்டின் 100-வது சுதந்திர தின கொண்டாட்டம் நடைபெறும் 2047-ம் ஆண்டு இந்தியா மீண்டும் உலக நாடுகளை வழிநடத்தும் வல்லமையை பெற்றிருக்கும்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.