மேட்டுப்பாளையம் பவானி ஆற்றில் குதித்து தற்கொலைக்கு முயன்ற முதியவர்
- முதியவர் பாலத்தில் இருந்து யாரும் எதிர்பாராத வேளையில் திடீரென ஆற்றில் குதித்துள்ளார்.
- மேட்டுப்பாளையம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மேட்டுப்பாளையம்,
திருப்பூர் மாவட்டம் அவிநாசி ஆலம்பாளையம் தெக்கலூர் பகுதியைச் சேர்ந்தவர் ரங்கன் (70).இவருக்கு பூவா(70) என்ற மனைவியும்,தங்கமணி என்ற மகளும் உள்ளனர். தங்கமணிக்கு திருமணமாகி கணவருடன் தந்தை வீட்டிலேயே வசித்து வருகிறார்.
இந்த நிலையில் அவரது வீட்டில் குடும்ப பிரச்சினை இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இதனால் மன உளைச்சலில் இருந்து வந்த ரங்கன் மேட்டுப்பாளையம் வனபத்ரகாளியம்மன் கோவிலுக்கு வந்துள்ளார்.பின்னர் நெல்லித்துறை சாலையில் உள்ள பவானி ஆற்றின் பாலத்தில் இருந்து யாரும் எதிர்பாராத வேளையில் திடீரென ஆற்றில் குதித்துள்ளார்.
அப்போது,அப்பகுதியில் பணியில் இருந்த சப்-இன்ஸ்பெக்டர் ராஜன் தலைமையிலான லைப் கார்ட்ஸ் குழுவினர் உடனடியாக ஆற்றில் குதித்து பரிசல் மூலமாக அவரை பத்திரமாக மீட்டு மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.இச்சம்பவம் குறித்து மேட்டுப்பாளையம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதுகுறித்து போலீசார் கூறுகையில் குடும்ப பிரச்சினை காரணமாக ரங்கன் ஆற்றில் குதித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார். அவரை அங்கு பணியில் இருந்த லைப் கார்ட்ஸ் குழுவினர் பத்திரமாக மீட்டு மேட்டுப்பாளையம் அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்துள்ளனர். தற்போது அவர் உடல் நலத்துடன் உள்ளார். இதுகுறித்து அவரது மகள் தங்கமணிக்கு தகவல் அளிக்கப்பட்டு உள்ளது.
தற்கொலைக்கு முயன்ற முதியவரை பத்திரமாக மீட்டு மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்த லைப் கார்ட்ஸ் குழுவினருக்கு அப்பகுதி மக்கள் பாராட்டுக்களை தெரிவித்தனர்.