கள்ளக்குறிச்சியில் அங்கன்வாடி ஊழியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
- தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர்கள் சங்கம் சார்பில் மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
- 4 ஆண்டுகள் முடிவடைந்த நிலையில் புதிய செல்போன்களை உடனடியாக வழங்க வேண்டும்.
கள்ளக்குறிச்சி:
கள்ளக்குறிச்சியில் தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர்கள் சங்கம் சார்பில் மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டர் அலுவலகம் எதிரில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர்கள் சங்க மாவட்ட தலைவர் கொளஞ்சியம்மாள் தலைமை தாங்கினார். மாவட்டத் துணைத் தலைவர்கள் இந்திராகாந்தி, ஷீலாராணி, மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் கலா, கவுசல்யா ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட செயலாளர் பிரேமா தொடக்க உரை ஆற்றினார்.
ஆர்ப்பாட்டத்தில் சிலிண்டருக்கான முழுத் தொகையை வழங்க வேண்டும், இல்லையெனில் வருடத்திற்கு 4 சிலிண்டரை அரசே வழங்க வேண்டும். காலிப் பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும். பணி இடமாறுதலை வழங்க வேண்டும். அங்கன்வாடி பணியாளர்களுக்கு செல்போன் கொடுத்து 4 ஆண்டுகள் முடிவடைந்த நிலையில் புதிய செல்போன்களை உடனடியாக வழங்க வேண்டும். 15 குழந்தைகளுக்கு குறைவாக இருக்கும் மையத்தை ஒன்றோடு ஒன்று இணைக்கும் திட்டத்தை கைவிட்டு உணவு செலவுகளை உயர்த்தி வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர். தொடர்ந்து இந்திய தொழிற்சங்க சங்க மைய மாவட்டத் தலைவர் விஜயகுமார், மாவட்ட செயலாளர் செந்தில், மாவட்ட பொருளாளர் வீராசாமி ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். இதில் அங்கன்வாடி பணியாளர்கள் மற்றும் ஊழியர்கள் பலரும் கலந்து கொண்டனர். முடிவில் மாவட்ட பொருளாளர் ஜெயந்தி நன்றி கூறினார்.