தருமபுரி மாவட்டத்தில் இன்னும் 7.78 லட்சம் பேர் கொரோனா தடுப்பூசி போடவில்லை- அமைச்சர் தகவல்
- இரண்டாம் தவணை தடுப்பூசி, 79.88 சதவீதம் பேருக்கும், பூஸ்டர் தடுப்பூசியை பொறுத்தவரை 13.37 சதவீதம் பேருக்கும் போடப்பட்டிருக்கிறது.
- தருமபுரி மாவட்டத்தில், சுமார் 7.78 லட்சம் நபர்களுக்கும் தடுப்பூசி போட வேண்டி இருக்கின்றது.
தருமபுரி,
தருமபுரி மாவட்டம், காரிமங்கலம் வட்டம், காரிமங்கலம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, நாகனம்பட்டி காரிமங்கலம் அரசு மகளிர் கலைக்கல்லூரியில் நடைபெற்ற 34 வது மாபெரும் கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம்களை மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
இந்நிகழ்ச்சியில் தருமபுரி மாவட்ட கலெக்டர் சாந்தி, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறையின் பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்துத்துறை இயக்குநர் செல்வவிநாயகம் ஆகியோர் முன்னிலையில் வகித்தனர்.
பின்னர் இதுகுறித்து அமைச்சர் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது:-
தருமபுரி மாவட்டத்தை பொறுத்தவரை, தடுப்பூசி போடும் பணிகளில், பதினெட்டு வயதை தாண்டியவர்களுக்கான முதல் தவணை தடுப்பூசி, 90.73 சதவீதம் பேருக்கு போடப்பட்டிருக்கிறது.
இரண்டாம் தவணை தடுப்பூசி, 79.88 சதவீதம் பேருக்கும், பூஸ்டர் தடுப்பூசியை பொறுத்தவரை 13.37 சதவீதம் பேருக்கும் போடப்பட்டிருக்கிறது. தருமபுரி மாவட்டத்தில், தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டியவர்களின் எண்ணிக்கை முதல் தவணை தடுப்பூசி, 1,21,963 நபர்களுக்கும், இரண்டாம் தவணை, 1,05,153 நபர்களுக்கும், முன்னெச்சரிக்கை தவணை, 5,51,473 நபர்களுக்கும் ஆக மொத்தம் சுமார் 7.78 லட்சம் நபர்களுக்கும் தடுப்பூசி போட வேண்டி இருக்கின்றது.
தருமபுரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவ மனையில் நாள்பட்ட சிறுநீரக செயலிழப்பு நோயாளிகளின் நலனுக்காக "தமிழ்நாடு ஒருங்கிணைந்த சிறுநீரக பராமரிப்பு திட்டத்தை'' மேம்படுத்தும் வகையில் புதிய இரத்த சுத்திகரிப்பு இயந்திரம் மற்றும் சிறுநீரக செயலிழப்பு சிகிச்சைக்காக ரூபாய் 13.00 லட்சம் மதிப்பீட்டில் நவீன உபகரணங்கள் வழங்கப்படும். இம்மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் தொலை மருத்துவ சேவை துவங்கப்படும்.
இந்நிகழ்ச்சியில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் தடங்கம். பி.சுப்பிரமணியம், முன்னாள் அமைச்சர் பி.பழனியப்பன், தருமபுரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை முதல்வர் மரு.அமுதவள்ளி, மாவட்ட சித்த மருத்துவ அலுவலர் மரு.கிருஷ்ணமூர்த்தி காரிமங்கலம் பேரூராட்சித்தலைவர் பி.சி.ஆர்.மனேகரன், காரிமங்கலம் பேரூராட்சி செயல் அலுவலர் டார்த்தி உள்பட பலர் கலந்து கொண்டனர்.