உள்ளூர் செய்திகள்

போலீஸ் சூப்பிரண்டு கார் மீது மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் மேலும் ஒரு மாணவர் பலி

Published On 2024-07-09 05:46 GMT   |   Update On 2024-07-09 05:46 GMT
  • மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேர் தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்தனர்.
  • விபத்து குறித்து மேட்டுப்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மேட்டுப்பாளையம்:

நீலகிரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டாக பணியாற்றுபவர் சுந்தரவடிவேல். இவரது கார் நேற்று ஊட்டியில் இருந்து மேட்டுப்பாளையம் நோக்கி வந்தது. காரில் போலீஸ் சூப்பிரண்டின் மனைவி மற்றும் உறவினர்கள் இருந்ததாக கூறப்படுகிறது. காரை தமிழ்குடிமகன் என்ற போலீஸ்காரர் ஓட்டி வந்தார்.

கார் மேட்டுப்பாளையம் அருகே உள்ள கல்லாறு தூரிப்பாலம் பகுதியில் வந்து கொண்டிருந்தது. அப்போது எதிரே வேகமாக வந்த மோட்டார்சைக்கிள் போலீஸ் சூப்பிரண்டின் கார் மீது மோதியது. இதில் மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேர் தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்தனர்.

விபத்தில் சிக்கிய மோட்டார் சைக்கிள் திடீரென தீப்பிடித்து எரிந்தது. தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து மோட்டார் சைக்கிளில் பற்றி எரிந்த தீயை தடுத்து அணைத்தனர்.

மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேரும் ஊட்டி காந்தல் பகுதியைச் சேர்ந்த அல்தாப் (21), அவரது நண்பர் முகமது ஜூனைத் (19) என்பது தெரியவந்தது. அவர்கள் 2 பேரும் மீட்கப்பட்டு மேட்டுப்பாளையம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டனர். முதலுதவி சிகிச்சைக்கு பின் அவர்கள் கோவையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர். அங்கு சிகிச்சை பலனின்றி அல்தாப் நேற்று மரணம் அடைந்தார்.

முகமது ஜூனைத்துக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனால் அவரும் சிகிச்சை பலனின்றி இன்று காலை இறந்தார். இதனால் இந்த விபத்தில் பலி எண்ணிக்கை 2 ஆக உயர்ந்தது.

விபத்து குறித்து மேட்டுப்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். காரை ஓட்டி வந்த போலீஸ்காரர் தமிழ்குடிமகனிடம் விசாரணை நடத்தப்படுகிறது.

பலியான அல்தாப் தனியார் காட்டேஜில் ஊழியராக பணியாற்றி வந்தார். முகமது ஜூனைத் அரசு கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வந்தார். இவர் ஊட்டி காந்தல் பகுதியைச் சேர்ந்த அன்சார் எனபவரின் மகன் ஆவார்.

காந்தல் பகுதியைச் சேர்ந்த கல்லூரி மாணவரும், வாலிபரும் இறந்ததால் அந்த பகுதி சோகத்தில் மூழ்கி உள்ளது. அவர்களது உறவினர்கள் கண்ணீர் விட்டு கதறி அழுதபடி இருந்தனர்.

Tags:    

Similar News