திருவள்ளூர் நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு அலுவலகத்தில் நடந்த லஞ்ச ஒழிப்பு சோதனை- ரூ.1 லட்சம் சிக்கியது
- சுமார் 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீடுகள் கட்டுவதற்கு அனுமதி வழங்கியதில் முறைகேடு நடப்பதாக கூறப்படுகிறது.
- அலுவலகத்தில் பணியாற்றும் 36 பேரில் 12 பேரிடம் கணக்கில் வராத ரூ. 1 லட்சத்து 7 ஆயிரத்து 856 பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது.
திருவள்ளூர்:
திருவள்ளூர், ராஜாஜிபுரம், விவேகானந்தர் தெருவில் தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய நிர்வாக பொறியாளர் அலுவலகம் செயல்பட்டு வருகிறது.
இந்த அலுவலகம் மூலமாக திருவள்ளூர் மாவட்டத்தில் பாரதப் பிரதமரின் அனைவருக்கும் வீட்டு வசதி திட்டத்தின் கீழ் பயனாளிகள் ரூ.2.10 லட்சம் அரசு மானியத்துடன் தாங்களாகவே வீடு கட்டும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
இந்நிலையில் அரசின் விதிமுறைகளை மீறி பெருமளவில் முறை கேட்டில் ஈடுபடுவதாக லஞ்ச ஒழிப்புத்துறையினருக்கு தொடர்ந்து புகார்கள் வந்தன.
இதனையடுத்து திருவள்ளூரில் உள்ள தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய நிர்வாக பொறியாளர் அலுவலகத்தில் திருவள்ளூர் மாவட்ட லஞ்ச ஒழிப்பு ஆய்வாளர்கள் தமிழரசி, சுமித்ரா மற்றும் மாவட்ட ஆய்வு குழு அலுவலர் நாராயணன் உள்ளிட்ட 7 பேர் கொண்ட லஞ்ச ஒழிப்பு போலீசார் நேற்று மாலை 3 மணியளவில் திடீர் சோதனை நடத்தினர். இந்த சோதனை நள்ளிரவு 12 மணி வரை நீடித்தது.
இந்த அலுவலகம் சென்னையில் இருந்து திருவள்ளூருக்கு மாற்றப்பட்டதில் கடந்த ஓராண்டில் திருவள்ளூர் மாவட்டத்தில் மட்டும் சுமார் 30 ஆயி ரத்திற்கும் மேற்பட்ட வீடுகள் கட்டுவதற்கு அனுமதி வழங்கியதில் முறைகேடு நடப்பதாக கூறப்படுகிறது.
மேலும் சென்னையையும் சேர்த்தால் 85 ஆயிரம் வீடுகளில் முறைகேடு நடந்திருக்க வாய்ப்பிருப்பதால் இது குறித்து விசாரணை செய்யப்பட்டு வருவதாக லஞ்ச ஒழிப்பு போலீசார் தெரிவித்தனர்.
இந்த சோதனையில் தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு செயற்பொறியாளர் அலுவலகத்தில் பணியாற்றும் 36 பேரில் 12 பேரிடம் கணக்கில் வராத ரூ. 1 லட்சத்து 7 ஆயிரத்து 856 பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது.
திருவள்ளூரில் இயங்கும் தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு செயற்பொறியாளர் மற்றும் ஊழியர்களிடம் துறை ரீதியாக நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று லஞ்ச ஒழிப்புத்துறையினர் தெரிவித்து உள்ளனர்.