கடத்தூரில் அலுவலகம் திறப்பு விழாவில் பேனர் வைப்பதில் அ.தி.மு.க.- தி.மு.க.வினர் இடையே வாக்குவாதம்
- பேனரை முன்னாடி வையுங்கள், யார் கிழித்து விடுவார் என்பதை பார்க்கலாம் என ஆவேசமாக பேசினார்.
- இதனால் சிறிது நேரம் மீண்டும் சலசலப்பு ஏற்பட்டது.
தருமபுரி,
தருமபுரி மாவட்டம், மொரப்பூர் ஊராட்சி ஒன்றியத்தில் இருந்து கடந்த அ.தி.மு.க. ஆட்சியில் கடத்தூர் தனி ஒன்றியமாக பிரிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து கடத்தூர் வட்டார வளர்ச்சி அலுவலகம் கட்டுவதற்கு கட்டும் பணி நடைபெற்று வந்த நிலையில், தற்பொழுது புதிய அலுவலகத்தினை நேற்று முதல்-அமைச்சர் தலைமைச் செயலகத்தில் இருந்து காணொளி வாயிலாக திறந்து வைத்தார்.
இந்த திறப்பு விழா நிகழ்ச்சிக்கு அ.தி.மு.க., தி.மு.க உள்ளிட்ட அரசியல் கட்சி பிரமுகர்கள் வந்தனர். இதில் திறப்பு விழாவிற்காக அ.தி.மு.க. ஆட்சியில் கட்டுமான பணிகள் தொடங்கப்பட்டதால், அ.தி.மு.க.வினரும் ஒருபுறம் சாலையோரம் கட்சி கொடி கட்டியும், விளம்பர பதாகையும் வைத்திருந்தனர்.
மேலும் தற்பொழுது முதல்-அமைச்சர் காணொளியில் திறப்பதால் தி.மு.க.வைச் சார்ந்தவர்களும் சாலையின் மறுபுறம் தி.மு.க. கொடி கட்டி, முதல்-அமைச்சர் படம் பொறித்த விளம்பர பதாகைகளை வைத்தனர்.
இதில் அ.தி.மு.க. விளம்பர பதாகை முன்பு, தி.மு.க.வினர் விளம்பர பதாகை வைத்தனர். இதனால் அ.தி.மு.க., தி.மு.க.வினரிடையே தகராறு ஏற்பட்டது. இதனையடுத்து சிறிது நேரத்தில் அ.தி.மு.க.வினரும், தி.மு.க.வினரிடையே கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டது. இதனை அறிந்த கடத்தூர் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர்.
அப்பொழுது அ.தி.மு.க. ஆட்சி காலத்தில் கட்டப்பட்ட கட்டிடம் என்பதாலும், ஒன்றியக் குழு தலைவர் அ.தி.மு.க.வை சார்ந்தவர் என்பதால், நாங்கள் விளம்பர பதாகைகள் வைத்துள்ளோம் என தெரிவித்தனர். அதேபோல் முதல்-அமைச்சர் காணொளிக் காட்சியின் மூலம் திறப்பதால் நாங்கள் விளம்பர பதாகைகள் வைத்திருக்கிறோம் என தி.மு.க.வினரும் தெரிவித்தனர்.
இதனையடுத்து இரு தரப்பினரையும் போலீஸ் இன்ஸ்பெக்டர் நாகலட்சுமி சமரசப்படுத்தினர். ஒரு கட்டத்தில் தி.மு.க.வினர், அ.தி.மு.க. பேனர் வைத்தால் அதை கிழித்து விடுவதாக போலீசார் முன்னிலையில் எச்சரிக்கை விடுத்தனர். இதனால் கோபம் அடைந்த காவல்துறையினர் பேனர் மீது கை வைத்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தி.மு.க.வினரை எச்சரித்ததாக கூறப்படுகிறது. இதனைத் தொடர்ந்து சிறிது நேரம் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
தொடர்ந்து அங்கு வந்த பாப்பிரெட்டிப்பட்டி சட்டமன்ற உறுப்பினர் கோவிந்தசாமி, போலீஸ் இன்ஸ்பெக்டரிடம் கடுமையான வாக்குவாதத்தில் ஈடுபட்டார். தொடர்ந்து பேனரை முன்னாடி வையுங்கள், யார் கிழித்து விடுவார் என்பதை பார்க்கலாம் என ஆவேசமாக பேசினார். இதனால் சிறிது நேரம் மீண்டும் சலசலப்பு ஏற்பட்டது.
இதனையடுத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் நாகலட்சுமி இரு தரப்பினரையும் சமாதானப்படுத்தி அலுவலகத்திற்கு அழைத்து சென்றார். இந்த சலசலப்பு நடந்த நேரத்திலேயே, மாவட்ட கலெக்டர் சாந்தி, நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர்செந்தில்குமார் அலுவலகத்திற்கு வந்தனர்.
ஆனால் எல்லோரும் சலசலப்பு முடிந்த பிறகு அலுவலகத்திற்கு செல்வதற்குள்ளேயே, முதல்-அமைச்சர் வட்டார வளர்ச்சி அலுவலகங்களை காணொளி வாயிலாக திறந்து வைத்து விட்டார்.
இதனை தொடர்ந்து மாவட்ட கலெக்டர் சாந்தி மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர் செந்தில்குமார் ஆகியோர் குத்துவிளக்கு ஏற்றி வைத்தனர். தொடர்ந்து கடத்தூர் வட்டார வளர்ச்சி அலுவலகத்திற்கான புதிய கட்டிடம் திறப்பு விழாவில் இரு தரப்பிற்கு இடையே ஏற்பட்ட பிரச்சனையால் திறப்பு விழா முடியும் வரை அலுவலக வளாகம் பரபரப்பாகவே இருந்தது.