ஜெயங்கொண்டம் நகராட்சி கூட்டத்தில் அ.தி.மு.க. கவுன்சிலர்கள் வாக்குவாதம்
- ஜெயங்கொண்டம் நகராட்சி கூட்டத்தில் அடிப்படை வசதிகளை நிறைவேற்றக்கோரி அ.தி.மு.க. கவுன்சிலர்கள் அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்
- கீழக்குடியிருப்பு மூன்றாவது மற்றும் நான்காவது வார்டுகளில் மயானத்திற்கும், கொம்மேடு பகுதியில் வேட்டைக்கார தெருவில் தார் சாலை, மின்விளக்கு வசதி செய்த தர வேண்டும் என கோரிக்கை வைத்தனர்
அரியலூர்:
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் நகர்மன்ற சாதாரண கூட்டம் தலைவர் சுமதி சிவகுமார் தலைமையில் நடைபெற்றது. நகராட்சி ஆணையர் சித்ரா (பொறுப்பு) வரவேற்றார். துணைத் தலைவர் கருணாநிதி முன்னிலை வகித்தார்.
தொடர்ந்து நடைபெற்ற கூட்டத்தில் சாலை வசதி, குடிநீர் வசதி, மின்சார வசதி, ஏரி, குளங்கள் தூர்வாருதல் உள்ளிட்ட பொதுமக்களின் அடிப்படை தேவை மற்றும் வசதிகள் நிறைவேற்றுவது குறித்து உறுப்பினர்கள் வலியுறுத்தி பேசினர். இந்த கூட்டத்தில் நகராட்சியின் செலவினங்கள் உள்ளிட்ட 25 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
முன்னதாக இளநிலை உதவியாளர் சாவித்திரி தீர்மானங்களை வாசித்தார். கூட்டத்தில் நகராட்சி உறுப்பினர்கள் அனைவரும் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் கவுன்சிலர் ரங்கநாதன் பேசுகையில், ஜெயங்கொண்டம் பஸ் நிலையத்தில் ராஜேந்திர சோழன் நினைவு வளைவு வைக்க வேண்டும், நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் குத்தகைக்காரர்கள் நகராட்சி அனுமதி இன்றி போலி ரசீது தயாரித்து வாரச்சந்தை மற்றும் தினசரி வசூல் செய்து வருவதை தடுத்து நிறுத்த வேண்டும்.
சந்தையை மறு குத்தகைக்கு ஏலம் விட வேண்டும், குத்தகைக்காரர்கள் செலுத்த வேண்டிய பணத்தை வசூல் செய்ய வேண்டும்.
கீழக்குடியிருப்பு மூன்றாவது மற்றும் நான்காவது வார்டுகளில் மயானத்திற்கும், கொம்மேடு பகுதியில் வேட்டைக்கார தெருவில் தார் சாலை, மின்விளக்கு வசதி செய்த தர வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை முன் வைத்து பேசினார்.
6-வது வார்டு கவுன்சிலர் செல்வராஜ், பஸ் நிலையத்தில் ஆவின் பால்கடை ஏலம் விட வேண்டும், 5-வது வார்டு குஞ்சிதபாதபுரம் பகுதியில் மின்விளக்கு வசதியும், கழிவுநீர் வாய்க்காலும் அமைத்து தர வேண்டும், 18-வது வார்டு கவுன்சிலர் கிருபாநிதி, தூய்மை பணியாளர்கள் தூய்மை பணி முறையாக மேற்கொள்ள வேண்டும் கீழத்தெருவிற்கு நீர்த்தேக்க தொட்டி ஒன்று அமைத்து குடிநீர் வசதி செய்து தர வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது.
ஒரு கட்டத்தில் அ.தி.மு.க. கவுன்சிலர்கள் கோரிக்கைகள் கால தாமதம் ஆவதாக கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
சுதந்திர தினத்தன்று வீடுகள் தோறும் கொடியேற்றுவதற்கு கவுன்சிலர்கள் தாங்களுக்கு நகராட்சி வழங்கிய படிப்பணத்தை கொடுத்து உதவினர்.