நூலக நண்பர்கள் திட்டத்தில் சேர தன்னார்வலர்களுக்கு அழைப்பு
- நூலக நண்பர்கள் திட்டத்தில் சேர தன்னார்வலர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
- மாவட்ட நூலக அலுவலர் தெரிவித்துள்ளார்
அரியலூர்:
அரியலூர் மாவட்டத்தில் செயல்படவுள்ள நூலக நண்பர்கள் திட்டத்தில் சேர விருப்பமுள்ள தன்னார்வலர்கள் இணையலாம் என்று மாவட்ட நூலக அலுவலர் சண்முகநாதன் தெரிவித்தார்.
இதுகுறித்து அவர் வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளதாவது: வீடுகளுக்கே நேரடியாக சென்று புத்தகங்கள் விநியோகிக்கும் நூலக நண்பர்கள் திட்டத்துக்கு தன்னார்வலர்களைத் தேர்வு செய்யும் பணி விரைவில் தொடங்க உள்ளது.
அதன்படி அரியலூர் மாவட்டத்தில் மொத்தம் உள்ள 65 நூலகங்களில் 40 நூலகங்களில் நூலக நண்பர்கள் திட்டம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதற்காக வாசிப்பில் ஆர்வம் உள்ள 200 தன்னார்வலர்களை கண்டறிவது தொடர்பாக அந்தந்த நூலகங்களுக்கு சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.
இந்த திட்டத்தில் தன்னார்வலர்களாக இணைவோருக்கு அடையாள அட்டை புத்தகங்களை எடுத்து செல்ல பை ஆகியவை வழங்கப்படும். முதலில் 25 நூல்கள் வழங்கப்பட்டு அவற்றை விநியோகித்த பிறகு மீண்டும் நூல்கள் வழங்கப்படும். இவ்வாறு மாதத்திற்கு 2 முறை நூல்கள் வழங்கப்படும்.
நூலகத்திலிருந்து நூல்களை பெற்றுச்சென்று நூல்களை விநியோகிப்பது. விநியோகித்த நூல்களை திரும்ப பெற்று வந்து நூலகத்தில் ஒப்படைப்பது ஆகிய பணிகளை இவர்கள் மேற்கொள்வர். எனவே இந்த திட்டத்திலே சேர ஆர்வமுள்ள தன்னார்லர்கள் இணையலாம் என்று அவர் தெரிவித்துள்ளார்.