நியாய விலைக் கடைகளில் கலெக்டர் திடீர் ஆய்வு
- நியாயவிலை கடைகள் பற்றி புகார் தெரிவிக்க தொலைபேசி எண் அறிவிப்பு
- இணையதளத்தின் வாயிலாக புதிய மின்னணு குடும்ப அட்டை பெற விண்ணப்பிக்கலாம்
அரியலூர் :
அரியலூர் மாவட்டம், திருமானூர் மற்றும் கீழப்பழுவூர் ஆகிய பகுதிகளில் இயங்கி வரும் நியாய விலைக் கடைகளுக்கு கலெக்டர் ரமணசரஸ்வதி சென்று, பொருள்களின் இருப்பு, குடும்ப அட்டைகளின் எண்ணிக்கை, இருப்பு பதிவேடு, பணியாளர் வருகை பதிவேடு, பொருள்களின் தரம் உள்ளிட்டவைகளை ஆய்வு செய்தார். பின்னர் அவர் தெரிவிக்கையில், பொதுமக்கள் தங்களுக்கு தேவையான நகல் குடும்ப அட்டை, மின்னணு குடும்ப அட்டையில் பெயர் சேர்த்தல், நீக்கல், முகவரி மாற்றம் மற்றும் குடும்ப தலைவர் பெயர் மாற்றம் ஆகியவற்றை இணையதளத்தின் வாயிலாக விண்ணப்பிக்கலாம்.மின்னணு குடும்ப அட்டையில் பதிவு செய்யப்பட்டுள்ள கைபேசி எண் மாற்றம் செய்தல் மற்றும் குடும்ப அட்டையில் திருத்தங்கள் மேற்கொள்ள தங்களது பகுதிகளிலுள்ள வட்ட வழங்கல் அலுவலகத்தில் விண்ணப்பிக்கலாம். புதிய மின்னணு குடும்ப அட்டை பெறுவதற்கு 5 வயதிற்கு மேற்பட்ட குடும்ப உறுப்பினர்களின் ஆதார் நகல், குடும்ப தலைவர் புகைப்படம் மற்றும் குடியிருப்பிற்கான ஆவணங்களுடன் இணையதளத்தின் வாயிலாக புதிய மின்னணு குடும்ப அட்டை பெற விண்ணப்பிக்கலாம். இதில் ஏதேனும் குறைகள் இருப்பின் நிவர்த்தி செய்வதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. நியாய விலைக்கடைகள் பற்றி அறிய மற்றும் புகார்களுக்கு 1967 மற்றும் 1800 4255 901 ஆகிய கட்டணமில்லா தொலைபேசி எண்ணில் தெரிவிக்கலாம் என்றார். இந்த ஆய்வின்போது, கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப் பதிவாளர் தீபாசங்கரி, மாவட்ட வழங்கல் அலுவலர் ரவிச்சந்திரன் மற்றும் அரசு அலுவலர்கள் உடனிருந்தனர்.