அரியலூரில் முதலமைச்சர் கோப்பைக்கான விளையாட்டுப் போட்டிகள்-கலெக்டர் ரமண சரஸ்வதி தொடங்கி வைத்தார்
- முதலமைச்சர் கோப்பைக்கான விளையாட்டுப் போட்டிகளை கலெக்டர் ரமண சரஸ்வதி தொடங்கி வைத்தார்
- இந்த போட்டிகளில் 2 ஆயிரத்து 68 வீரர், வீராங்கனைகள் கலந்து கொள்கின்றனர்
அரியலூர்:
அரியலூர் மாவட்ட விளையாட்டு அரங்கில் மாவட்ட அளவிலான தமிழ்நாடு முதலமைச்சர் கோப்பைக்கான விளையாட்டுப் போட்டிகளை மாவட்ட கலெக்டர் பெ.ரமண சரஸ்வதி துவக்கி வைத்தார். பின்னர் கல்லூரி மாணவ, மாணவியர்களின் 100 மீட்டர் ஓட்டப்பந்தையத்தை தொடங்கி வைத்து, அவர் பேசியதாவது: அரியலூர் மாவட்டத்தில் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம், மாவட்ட விளையாட்டு பிரிவுடன் இணைந்து கல்லூரி மாணவ, மாணவியர்களுக்கான மாவட்ட அளவிலான தமிழ்நாடு முதலமைச்சர் கோப்பைக்கான விளையாட்டுப் போட்டிகள் மாவட்ட விளையாட்டரங்கில் துவக்கி வைக்கப்பட்டுள்ளது.
மேலும் தமிழ்நாடு முதலமைச்சர் கோப்பைக்கான விளையாட்டுப் போட்டிகள் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியர்கள், பொதுமக்கள், அரசு ஊழியர்கள் மற்றும் மாற்றுத்திறனாளி்கள் ஆகிய 5 பிரிவுகளில் ஆண், பெண் இருபாலரும் பங்கேற்கும் வகையில் மாவட்ட அளவில் 42 வகையான போட்டிகளும், மண்டல அளவில் 8 வகையான போட்டிகளும் என மொத்தம் 50 வகையான போட்டிகள் நடைபெறவுள்ளது. இந்த போட்டிகளில் 2 ஆயிரத்து 68 வீரர், வீராங்கனைகள் கலந்து கொள்கின்றனர். இதில், கால்பந்து, கையுந்து பந்து, கபடி, மேசை பந்து உள்ளிட்ட 10 வகையான போட்டிகள் நடத்தப்படுகிறது.
இதுபோன்ற விளையாட்டுப் போட்டிகளில் கலந்துகொள்வதன் மூலம் மாணவர்கள் தங்களது விளையாட்டு திறனை மேம்படுத்திக் கொள்ள முடியும். இதேபோன்று மாவட்ட அளவிலானப் போட்டிகளில் வெற்றி பெற்று மாநில அளவிலான போட்டிகளிலும் வெற்றி பெற்று நமது அரியலூர் மாவட்டத்திற்கு பெருமை சேர்க்க வீரர்களுக்கு வாழ்த்துகள் என தெரிவித்தார். இந்நிகழ்ச்சியில் மாவட்ட விளையாட்டு அலுவலர் லெனின், வருவாய் கோட்டாட்சியர் ராமகிருஷ்ணன், காவல் துணைக் கண்காணிப்பாளர் சங்கர்கணேஷ், வட்டாட்சியர் கண்ணன், அரசு அலுவலர்கள் மற்றும் விளையாட்டு வீரர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.