கால்நடைகளை தாக்கும் அம்மை நோயால் விவசாயிகள் கவலை
- கால்நடைகளை தாக்கும் அம்மை நோயால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
- இந்த நோயால் கால்நடைகள் உயிரிழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளதால் கால்நடை மருத்துவ முகாம் நடத்த கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
அரியலூர்
அரியலூர் மாவட்டம் உடையார்பாளையம், கழுமங்கலம், கச்சிப்பெருமால், துலாரங்குறிச்சி, இடையார், சூரியமணல், கல்லாங்குளம், வாணத்திைரயான்பட்டிணம், காடுவெட்டங்குறிச்சி, சோழங்குறிச்சி, பருக்கல், கீழமைக்கால்பெட்டி, பாண்டிபஜார், சுத்தமல்லி, உல்லியகுடி, வெண்மான்கொண்டான், தத்தனூர், மனகெதி, நாச்சியார்பேட்டை உள்ளிட்ட கிராமங்களில் வாழும் விவசாயிகள் ஒவ்வொருவரும் ஆடுகள் மற்றும் மாடுகள் வளர்த்து தங்களின் அன்றாட பிழைப்பை நடத்தி வருகின்றனர்.
இந்த நிலையில் கடந்த 2 மாதங்களாக பருவ நிலை மாற்றத்தினால் மாடுகளை அம்மை நோய் தாக்கி வருகிறது. இந்த மாட்டு அம்மை ஆரம்பத்தில் கொசு கடி, ஈ கடி போல் தெரிகிறது. பின்னர் ஒரு வாரத்தில் உடம்பு முழுவதும் சின்ன கட்டிகள் மற்றும் காலில் பெரிய கட்டிகள் தோன்றி மாடுகள் மேயமுடியாமலும், நடந்து செல்லமுடியாமலும் அவதிப்படுகிறது. இதனால் இப்பகுதி விவசாயிகள், கால்நடை வளர்ப்பவர்கள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். இதுகுறித்து அவர்கள் கூறியதாவது:- கழுமங்கலத்தை சேர்ந்த விவசாயி கலியபெருமாள்:- என்னிடம் 4 மாடுகள் இருக்கிறது. இதில் 2 மாடுகளுக்கு அம்மை நோய் வந்ததால் நான் ரொம்ப சிரமப்பட்டேன். மாட்டின் உடம்பு முழுவதும் கட்டிகள் மற்றும் வீக்கம் இருந்தது.
உடனே கால்நடை மருத்துவரை அணுகி விவரத்தை சொல்லி தடுப்பூசி போட்டேன். அதன் பிறகு இயற்கை முறையில் வேப்பிலை, குப்பைமேனி, மஞ்சள் மற்றும் உப்பு சேர்த்து தண்ணீரில் கொதிக்க வைத்து வீக்கம் உள்ள இடத்தில் ஒத்தடம் கொடுத்தேன். பிறகு படிப்படியாக நோயின் தாக்கம் குறைந்து பழைய நிலைக்கு வருவதற்கு 15 நாட்களுக்கு மேல் ஆகிறது. பிளாக்குறிச்சியை சேர்ந்த கொளஞ்சிநாதன்:- எனது ஊரில் உள்ள விவசாயிகளின் மாடுகளுக்கு அம்மை நோய் வந்து மாடுகள் கஷ்டப்படுவதை நேரில் பார்த்தேன். அதனால் எனது மாடுகளுக்கு அம்மை நோய் வந்தால் நம்மால் தாக்கு பிடிக்க முடியாது. அதனால் எனது 4 மாடுகளையும் விற்றுவிட்டேன்.
அம்மை நோய் முடிந்த பிறகு மாடுகள் வாங்கி கொள்ளலாம் என்று இருக்கிறேன். பொதுவாக இந்த நோயை ஆரம்பத்திலேயே விவசாயிகள், கால்நடை வளர்பவர்கள் கண்டு பிடித்து தடுப்பூசி மற்றும் இயற்கை முறையில் மஞ்சள், வேப்பிலை, குப்பைமேனி ஆகியவற்றை சேர்த்து அரைத்து பாதிக்கப்பட்ட இடத்தில் பூசினால் சரியாகிவிடுகிறது. இந்த மாட்டம்மை நோயை ஆரம்பத்தில் கண்டு பிடிக்காத விவசாயிகளின் மாடுகள் மற்றும் கன்றுகள் இறந்து விடுகின்றன. ஆனந்தகிருஷ்ணன்:- என்னிடம் 3 மாடுகள் உள்ளது. அம்மை நோய் வருவதற்கான அறிகுறிகள் தெரிந்தவுடன் கால்நடை மருத்துவரை அணுகி தடுப்பூசி செலுத்தி விட்டேன். அதனால் எனக்கு எந்த பாதிப்பும் இல்லாமல் போய்விட்டது.
நான் இருந்ததால் உடனே தடுப்பூசி செலுத்திவிட்டேன். வசதி இல்லாத ஏழை விவசாயிகள் அவர்கள் மாடுகளுக்கு அம்மை நோய் வந்தால் அவர்களால் தடுப்பூசி செலுத்த முடியாது. இந்த சூழ்நிலையில் மாவட்ட நிர்வாகம் தலையிட்டு ஒவ்வொரு ஊராட்சியிலும் கால்நடை மருத்துவ முகாம் அமைத்து தடுப்பூசி போடுதல் வேண்டும், ஒரு சில ஊராட்சியில் தடுப்பூசி முகாம் போடப்பட்டுள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினர். எனவே மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்து கால்நடைகளை தாக்கும் பெரியஅம்மை, மாட்டு அம்மை, இதனை சேர்ந்த தோல் கழலை நோய் உள்ளிட்ட நோய்களை தடுத்து கால்நடைகளை பாதுகாக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.